மக்கா, மதீனா பகுதியில் விழுந்த ஏவுகணை பாகங்கள்! சவுதி மீது ஏமன் ஹூதிகள் தாக்குதல்! நடந்தது என்ன
ரியாத்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல மாதங்களாக இருந்து வந்த அமைதியற்ற சூழல் தற்போது மீண்டும் பெரும் போர்ப் பதற்றமாக வெடித்துள்ளது. சவுதி அரேபியாவின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா பகுதிகளை நோக்கி ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வீசிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானிலேயே சவுதி வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
வானில் அவை தகர்க்கப்பட்டாலும், ஏவுகணையின் உடைந்த பாகங்கள் மற்றும் இரும்புச் சிதறல்கள் மக்கா உள்ளிட்ட பல முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்புத் துறை இது குறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத ஹூதி அமைப்பினர் மக்கா மற்றும் மதீனா பகுதிகளைக் குறிவைத்து ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெற்றிகரமாக வழிமறிக்கப்பட்டதாகவும், அவற்றின் உடைந்த பாகங்கள் மக்கா நகருக்கு வெளியே உள்ள வாடி முகமாஸ் (Wadi Mughamas), ஜித்தா நகரில் உள்ள அல்-நுஸ்ஹா (Al-Nuzha), தாயிப் பகுதியில் உள்ள வாடி ஜலீல் (Wadi Jalil) மற்றும் ராபிக் (Rabigh) ஆகிய இடங்களில் விழுந்ததாகவும் சவுதி பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.
பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
ஏவுகணைத் தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே சவுதி சிவில் பாதுகாப்புத் துறை மேற்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. மக்கா, தாயிப், யான்பு உள்ளிட்ட நான்கு மேற்கு மாகாணங்களில் அசாதாரண ஆபத்து உள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலோ அல்லது அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களிலோ தஞ்சம் அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
வான் பாதுகாப்புப் படையினர் சரியான நேரத்தில் செயல்பட்டு ஏவுகணைகளைத் தகர்த்ததால் மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதங்களோ அல்லது புனித தலங்களுக்கு நேரடிப் பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றாலும், வானத்திலிருந்து வெடித்துச் சிதறிய கூர்மையான இரும்புத் துண்டுகள் கீழே விழுந்ததால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. சிவில் பாதுகாப்பு மீட்புக் குழுவினர் உடனே அப்பகுதிகளுக்கு விரைந்து சென்று சிதறல்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஹூதிகள் சொல்வது என்ன?
சவுதி அரேபியாவின் குற்றச்சாட்டுக்கு ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய ஹூதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி, "இஸ்லாமியர்களின் புனித பூமிகளான மக்கா மற்றும் மதீனாவை நாங்கள் குறிவைத்ததாக சவுதி அரசு கூறுவது முழுக்க முழுக்க ஒரு பெரிய பொய்" என்று தெரிவித்துள்ளார். புனித தலங்களை தாக்கும் எண்ணம் தங்களுக்கு எப்போதும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதே சமயம், சவுதி அரேபியாவின் முக்கிய ராணுவ மற்றும் பொருளாதார நிலைகள் மீது பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதை ஹூதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் சவுதியின் பல பகுதிகள் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் உரிமை கோரியுள்ளனர்.
தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது இரண்டு கட்டங்களாகத் தாக்குதல் நடத்தியதாகவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள தம்மாம் விமான நிலையம், தெற்கு எல்லையில் உள்ள நஜ்ரான் விமான நிலையம் ஆகியவற்றையும் குறிவைத்ததாக யாஹ்யா சாரி பட்டியலிட்டுள்ளார். மேலும், தெற்கு சவுதியில் உள்ள கமீஸ் முஷைத் விமானப்படைத் தளம், சவுதியின் கிழக்கிலிருந்து மேற்கு பகுதிக்கு கச்சா எண்ணெயை எடுத்துச் செல்லும் பிரதான குழாய்கள் மற்றும் கச்சா எண்ணெய் உந்து நிலையங்கள் மீதும் குண்டுகள் வீசியதாக ஹூதிகள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
எண்ணெய் ஏற்றுமதி மையங்களும் குறி
சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெயை வளைகுடா பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியைத் தவிர்த்து, மாற்று வழியில் செங்கடல் வழியாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மேற்கு கடற்கரையில் உள்ள யான்பு துறைமுகத்தைப் பயன்படுத்துகிறது. இந்த யான்பு எண்ணெய் சுத்திகரிப்பு மையம் மற்றும் தாயிப் நகரங்களை நோக்கியும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவை நடுவானில் முறியடிக்கப்பட்டதாகவும் சவுதி கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
மறுபுறம், ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனில் (Aden) உள்ள கடலோரக் காவல் படை தளங்கள் மீதும் ஹூதிகள் மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமனின் சவுதி ஆதரவு அரசு சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் நிலம், வான் மற்றும் கடல் எல்லைப் பகுதிகள் என அனைத்து திசைகளிலும் மோதல் தீவிரமடைந்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் முறிந்தது ஏன்?
ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் செயல்படுகின்றன. தலைநகர் சனாவைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பக்கபலமாக இருந்து வருகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கை காரணமாக, இரு தரப்புக்கும் இடையேயான எல்லை தாண்டிய ஏவுகணைத் தாக்குதல்கள் பெரும்பாலும் கட்டுக்குள் இருந்தன. ஆனால், காசா போர் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு எதிரான ஹூதிகளின் நிலைப்பாடு காரணமாகப் பிராந்தியத்தில் பதற்றம் எகிறியது. தற்போது சவுதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்பு மற்றும் எல்லை நகரங்களை நோக்கி ஹூதிகள் மீண்டும் தாக்குதல் தொடுக்கத் தொடங்கியுள்ளது 2022-ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தை முற்றிலும் தகர்த்து எறிந்துள்ளது.
எண்ணெய் வயல்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள புனித நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் ஏவுகணை பாகங்கள் விழத் தொடங்கியிருப்பது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தைக்கும், உலக அமைதிக்கும் புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நிலைமை மேலும் மோசமடைந்தால் மீண்டும் முழு வீச்சிலான போர் வெடிக்கும் சூழல் உருவாகலாம் என உலக அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.




Click it and Unblock the Notifications
