சவுதியிலேயே புதைக்கப்படும் 45 இந்தியர்கள்.. பஸ் விபத்தில் பலியானோரின் உடல்கள் ஹைதராபாத் கொண்டு வராதது ஏன்?
ரியாத்: சவுதி அரேபியாவில் பஸ் மீது டீசல் டேங்கர் மோதியது. இதில் ஹைதராபாத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்காக பஸ்சில் பயணித்த 45 இஸ்லாமியர்கள் உடல் கருகி எரிந்தனர். பொதுவாக வெளிநாடுகளில் இந்தியர்கள் இறந்தால் அவர்களின் உடல்கள் நம் நாட்டுக்கு கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் சவுதி அரேபியாவில் இறந்த 45 பேரின் உடல்களும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவது இல்லை. அவர்களின் உடல்கள் சவுதி அரேபியாவிலேயே புதைக்கப்பட உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 54 பேர் நவம்பர் 9 ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியா புறப்பட்டனர். இவர்கள் சவுதி அரேபியாவில் மெக்காவில் இருந்து மதினாவுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். மொத்தமுள்ள 54 பேரில் பஸ்சில் 46 பேர் மட்டுமே பயணித்தனர்.

4 பேர் மெக்காவில் தங்கினர். இன்னும் 4 பேர் பஸ்சில் இடம் இல்லாததால் செல்லவில்லை. இதனால் 46 பேர் மட்டும் பஸ்சில் பயணித்தனர். முக்ரஸ் என்ற இடத்தில் டீசல் டேங்கர் லாரி அவர்களின் பஸ் மீது மோதியது. கடந்த 16ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த விபத்து நடந்தது.
இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் பஸ்சில் பயணித்தவர்களில் 45 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த 18 பெண்கள், 17 ஆண்கள், 10 குழந்தைகள் இறந்தனர். பஸ்சில் பயணித்த முகமது அப்துல் சோயிப் (வயது 24) என்பவர் மட்டுமே உயிர் தப்பினார். டிரைவர் கேபினில் அவர் அமர்ந்து பயணித்தார். விபத்து நடந்தபோது அவர் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியே குதித்ததால் பிழைத்தார்.
இந்நிலையில் தான் சவுதி அரேபியா விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் நம் நாட்டுக்கு கொண்டு வரப்போவது இல்லை. அவர்களின் உடல்கள் சவுதி அரேபியாவிலேயே புதைக்கப்பட உள்ளது. சவுதியை எடுத்து கொண்டால் ஹஜ் அல்லது உம்ரா யாத்திரையின்போது இறப்பவர்களின் உடல்களை அங்கிருந்து அவர்களின் சொந்த நாட்டுக்கு கொண்டு வருவதை கடினமாக்கி வைத்துள்ளது. இது இந்தியாவுக்கும் பொருந்தும்.
ஏனென்றால் ஹஜ் அல்லது உம்ரா செல்லும் இஸ்லாமியர்களிடம் முன்கூட்டியே அதற்கான கையெழுத்து வாங்கப்படும். அதன்படி ஹஜ், உம்ரா செல்லும் இஸ்லாமியர்கள் மெக்கா, மதீனா அல்லது சவுதி அரேபியாவின் ஏதாவது ஒரு இடத்தில் இறந்தால் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும் என்பதற்கான கையெழுத்து வாங்கப்படுவதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி தற்போதைய விபத்தில் பலியானவர்களின் உடல்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டது. இதனால் அவர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவில்லை.
சவுதி அரேபியாவின் மதினாவில் உள்ள ஜன்னத்துல் பக்கியில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக தெலுங்கானா அமைச்சரவை கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரின் உடல்களையும் அங்கேயே புதைக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களின் மதமுறைப்படி அடக்கம் செய்யவும், ஒவ்வொருவரின் குடும்பத்தில் இருந்து 2 பேரை சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அவர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவது இல்லை.
இது ஹஜ் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற விஷயத்துக்காக சவுதி செல்வோர் ஒருவேளை அங்கு இறந்தால் அவர்களின் உடல்களை சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரலாம். இல்லாவிட்டால் அங்கேயே அடக்கம் செய்யலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications