சூப்பர்.. மேட்டூரில் 390 நாட்களுக்கு பிறக்கு நடந்த அதிசயம்! நிம்மதி பெருமூச்சு விட்ட டெல்டா மக்கள்.!
சேலம்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் 390 நாட்களுக்கு பிறகு அணையின் நீர் மட்டம் 90 அடியை தொட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பல அணைகள் இருந்தாலும், மேட்டூர் அணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம் விவசாயம்தான். டெல்டா மாவட்ட மக்கள் மேட்டூர் அணையின் நீரை நம்பித்தான் இருக்கின்றனர். தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரண்டும் மழைப்பொழிவை கொடுக்கின்றன. தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் 70%க்கும் அதிகமான நிலப்பரப்புக்கு மழை கொடுக்கிறது.

ஆனால், டெல்டா மாவட்டங்களுக்கு போதுமான மழையை கொடுப்பதில்லை. இந்த முறையும் அதேதான் நடந்திருக்கிறது. நாகை, தஞ்சை, திருவாரூர் என மூன்று மாவட்டங்களிலும் குறைவான அளவே மழை பெய்திருக்கிறது. நாகையை எடுத்துக்கொண்டால் ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்றைய தேதிவரை 47.9 மி.மீதான் மழை பெய்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழையை விட தற்போது பெய்திருப்பது 33 சதவிகிதம் குறைவு.
திருவாரூரை எடுத்துக்கொண்டால் 84.7 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது இயல்பைவிட 5% அதிகம்தான் என்றாலும், வேளாண்மைக்கு போதுமானது கிடையாது. தஞ்சைக்கும் இதே நிலைதான். ஜூன் 1 தொடங்கி இதுவரை இயல்பாக 105.9 மி.மீ பெய்திருக்கிறது. இது இயல்பைவிட 29 சதவிகிதம் அதிகம். ஆனால் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை எடுத்துக்கொண்டால் இயல்பை விட 64% கூடுதலாக பெய்திருக்கிறது. அப்படி இருக்கையில் மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களில் பெய்த மழை மிகவும் குறைவு.
எனவேதான் டெல்டா விவசாயம் மேட்டூர் நீரை நம்பி இருக்கிறது. வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் மாதத்தில் அணையில் நீர் மட்டம் வெகு குறைவாக இருந்தது. கர்நாடகாவும் போதுமான அளவுக்கு நீரை திறக்கவில்லை. இப்படி இருக்கையில்தான் மேட்டூரின் நீர்மட்டம் 390 நாட்களுக்கு பின்னர் 90 அடியை தொட்டிருக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்டவை நிரம்பியுள்ளன. எனவே, உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இது மேட்டூரின் நீர் மட்டத்தை சர்ரென உயர்த்தியிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு 28,856 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. தற்போது அணையில் 52.662 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு இதேபோல தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் விரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications