நாய்க்கறி, பூனைக்கறியை விடுங்க.. அது மட்டன் மாதிரியே இருந்துச்சாம்.. சேலத்தில் சாப்பிட்டு.. பரபரப்பு
சென்னை: மட்டன் என்ற பெயரில் நாய்க்கறி, பூனைக்கறி, காக்கா பிரியாணி என்று சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த தகவலின்பேரில் அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று உடனுக்குடன் ஆய்வு நடத்தி, நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து விற்பனை செய்யும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது. என்ன நடக்கிறது வனப்பகுதிகளில்?
கடந்த வருடம், பிராட்வே, அயனாவரம், சவுகார்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு, சாலையோர வியாபாரிகளுக்கு பூனை இறைச்சி விற்கப்பட்டது.. இது தொடர்பாக 2 பேர் கைதாகியிருந்தனர்.

கடந்த வாரம் வேலூரில் நாய்க்கறி விற்பதாக திடீர் குற்றச்சாட்டுகள் கிளம்பின.. எஸ்.எல். புதூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரின் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, நாய்கள் பராமரிப்பு மையம் நடத்தி வருகிறார். நாய்களுக்கு சிகிச்சையுடன், கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.
நாய்க்கறி விவகாரம்
ஆனால், நாய்களை அடைத்து வைத்து அவற்றை வெட்டி விற்பனை செய்வதாக சந்தேகித்து, உடனடியாக பராமரிப்பு மையத்தை காலி செய்ய வேண்டுமென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாய்க்கறி வெட்டி விற்பனை செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை இதுவரை கிடைக்கவில்லை என்றாலும், காட்பாடி தாசில்தார், பிராணிகள் வதை தடுப்பு சங்கம், மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டுள்ளன.
இப்படி பூனை, நாய்களுக்கு இடையே, காட்டில் விலங்குகளை வேட்டையாடி அவைகளை இறைச்சிக்கு பயன்படுத்தும் நபர்களும் அதிகரித்து வருகிறார்கள்..
முயல் கறிக்கு ஆசைப்பட்ட 2 பேர்
நேற்றுகூட 2 பேர் சேலம் மாவட்டத்தில் கைதாகி உள்ளனர்.. மேட்டூர் பி.என்.பட்டி, புதுக்காட்டை சேர்ந்த அய்யந்துரை (45), நவப்பட்டி செக்கானுாரை சேர்ந்தவர் லோகநாதன் (55), இருவரும் பாலமலை காப்புக்காடு, செக்கானுார் வனப்பகுதியில் முயல் பிடிக்க, கம்பி வலைகள், நெற்றியில் பொருத்தப்பட்ட விளக்குகளுடன் சென்றிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களை, வனவர் சிவகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் பிடித்து, கம்பிவலை, விளக்குகளை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் 2 பேருக்குமே தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங் ரவி உத்தரவிட்டுள்ளார்..
வவ்வால் கறி விற்பனை
அதேபோல, இதே சேலம் மாவட்டம் ஓமலூரில் வவ்வால் வேட்டையும் நடந்துள்ளது.. டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக டேனிஷ்பேட்டை வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது..
இதனால், வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான 2 பேரை மடக்கிப் பிடித்தனர். கமல் மற்றும் செல்வம் என்ற அந்த நபர்கள், பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, அவற்றை சமைத்து, மாலை நேர சில்லி சிக்கன் என்று சொல்லி பொதுமக்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது..
ஒரு மரத்தில் லட்சக்கணக்கில் வவ்வால்
அதாவது, ஓமலூர் அருகே உள்ள பன்னப்பட்டி ஊராட்சி வவ்வால்தோப்பு பகுதியில், ஒரு மரத்தில் லட்சக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகிறதாம். இவைகளை அந்த ஊர் மக்கள் கடவுளாக வணங்கி வருகிறார்களாம்.
எனவே அந்த வவ்வால்களை வேட்டையாட போனபோது, இந்த 2 பேரையுமே வவ்வால்களை கொல்ல அனுமதிக்கவில்லையாம். அதனால்தான், காட்டுக்குள் சென்று வவ்வால்களை வேட்டையாடியதாக, கைதான 2 பேரும் வாக்குமூலம் தந்துள்ளனர்.. சில்லி சிக்கன் என்று சொல்லி விற்கப்பட்ட வவ்வால் கறியை எத்தனை பேர் சாப்பிட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை.. விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications