தமிழகத்துக்கு பொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. மக்கள் உற்சாகம்
சேலம்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 5,100 கன அடியாக உள்ளது. அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாகவும், கபினி அணைக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணை 124 அடியில் 101 அடியாகவும், கபினி அணை 84 அடியில் 81 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை தீவிரமடைந்து வருவதால், நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாட்டு எல்லையான பிலிகுண்டுக்கு வந்து சேர்ந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 5,100 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றங்கரையில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மழை தீவிரத்தால் எந்த நேரத்திலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல், ஊட்டமலை போன்ற பகுதிகளில் வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கும்போது கவனமாக குளிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் காவிரியில் இருந்து தண்ணீர் வராததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளது. தற்போது கர்நாடகா, கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் 100 அடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications