சேலத்தில் "சம்பவம்" செய்த பாமக அருள்.. மேடையில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து.. படக்னு பார்த்த திமுக
சேலம்: மாணவ - மாணவிகளிடம் பாமக எம்எல்ஏ அருள் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்திருந்த நிலையில், மீண்டும் அதே வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. என்ன காரணம்?
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏவாக உள்ளவர் அருள். 2 நாட்களுக்கு முன்பு, இவரது தொகுதியிலுள்ள பாகல்பட்டி என்ற கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

பள்ளி விழா: இந்த பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்க அருள் சென்றிருந்தார். இந்த விழாவில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் பங்கேற்க வந்திருந்தனர்.
பள்ளியில் இடைநிலை பருவத்தேர்வு நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியை சீக்கிரமாக நடத்தவேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் அருளானந்தம், எம்எல்ஏ அருள் ஆகியோர் ஓரிரு நிமிடங்கள் பேசினார்கள்.. ஆனால், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜா பேசுவதை தவிர்த்துவிட்டார்.
அருள் எம்எல்ஏ : பிறகு, மாணவர்களுக்கு பாமக எம்எல்ஏ அருள் சைக்கிள் வழங்க முயன்றார். அப்போது திமுகவினர் சிலர், தங்களுக்கு ஏன் பேச வாய்ப்பளிக்கவில்லையே? என்று கேட்டு ஆதங்கப்பட்டனர்.. பிறகு, சைக்கிள் வழங்குவது தொடர்பாக எம்எல்ஏ அருள் மற்றும் திமுகவினர் தரப்பில் வாக்குவாதம் வெடித்தது.. 'அரசு தரும் சைக்கிளை, நாங்களே மாணவர்களுக்கு தருகிறோம், நீங்கள் தரக்கூடாது என்று திமுகவினர் சொன்னார்கள்.
அதற்கு எம்எல்ஏ அருள், இது என்னுடைய தொகுதி.. மாணவ-மாணவிகளுக்கு நான்தான் சைக்கிள் வழங்குவேன்.. எம்எல்ஏ என்ற உரிமை எனக்கு உள்ளது என்றார். இப்படியே 2 தரப்பிலும் தகராறு முற்றியது. ஒருகட்டத்தில் அருளை, அந்த விழாவில் பேசக்கூடாது என்றும் திமுகவினர் தடுத்ததாக கூறுகிறார்கள்.
மாணவர்கள், ஆசிரியர்கள் சுற்றிநிற்க, அவர்களை வைத்து கொண்டே இந்த தகராறு நடந்துள்ளது. இந்த நிகழ்வுகளை பார்த்து, ஒட்டுமொத்த பள்ளியும் அதிர்ந்தது.. சிலர் இதில் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
ஒழுக்கம்: அதற்கு பிறகு எம்எல்ஏ அருள் உரையாற்றும்போது, மாணவர்களிடம் உரையாடலாம் என்று வந்தேனே தவிர, இங்கு அரசியல் செய்ய வரவில்லை.. ஒழுக்கத்தை கற்கும் இடத்தில், உங்களை அவர்கள் அசிங்கப்படுத்திவிட்டார்கள்.. அதனால் அவர்கள் செய்த தவறுக்கும் சேர்த்து, நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்றார்.
அத்துடன் இல்லாமல், மைக்கை பக்கத்திலிருந்தவர்களிடம் தந்துவிட்டு, திடீரென தரையில் விழுந்து, அங்கு உட்கார்ந்திருந்த மாணவர்களை பார்த்து கைகூப்பி மன்னிப்பு கேட்டார். இதை பார்த்ததுமே, பதறிப்போன மாணவர்கள், அங்கிருந்து எழுந்து நின்றுகொண்டனர். இந்த காட்சியெல்லாம் வீடியோவாகவே, அன்றைய தினம் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
விளக்கம்: இந்நிலையில், எம்எல்ஏ அருள், பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ளார். அப்போது, மாணவர்களின் காலில் விழுந்தது ஏன் என்பது குறித்தும் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.
அதில், வேறு ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டியிருந்ததால், அந்த நிகழ்ச்சியை விரைவாக நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால், சிலர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.. இந்த சம்பவம் மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது.. அதனால்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன்.. பள்ளி மாணவர்கள் வளர்ச்சியில் எப்போதுமே அக்கறை எனக்கு உண்டு" என்றார். இதையடுத்து, எம்எல்ஏ அருள், மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ, இணையத்தில் இன்னொரு ரவுண்டு வர துவங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications