தமிழகத்தில் கரண்ட் பில் ஷாக் அடிக்கப்போகிறது.. பஸ் கட்டணம் உயரும்.. எச்சரிக்கும் எடப்பாடி பழனிச்சாமி
சேலம்: திமுக அரசு தேர்தல் வெற்றிக்காக அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றியுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் விரைவில் பேருந்துக் கட்டணம், மின் கட்டணமும் உயரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் இலவச தையல் பயிற்சி பள்ளி துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லை என 16 லட்சம் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஏமாற்றி உள்ளது திமுக அரசு என தெரிவித்தார்.
அப்போ கன்பார்ம்..? உயர்கிறது பஸ் கட்டணம்? அதிமுக ஆட்சியில் விலையே உயரவில்லையா? கே.என். நேரு ஆவேசம்!

எட்டுவழிச்சாலை திட்டம்
நாட்டின் வளர்ச்சிக்கு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்திற்கும் சாலைகள் அவசியம் எனவும், எட்டு வழி சாலை திட்டத்தை அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும்போது திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தது. ஆனால் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசு எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தியது. ஆனால் தற்போது எட்டு வழி சாலை திட்டம் நல்ல திட்டம் என திட்டத்தை ஆதரித்துள்ளனர்.

ஓராண்டு கால ஆட்சி
திமுக கூட்டணி கட்சிகளும் தற்போது எட்டு வழி சாலை திட்டம் சம்பந்தமாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாக உள்ளனர். அரசின் திட்டங்களை செயல்படுத்த திமுக அரசிற்கு நல்ல திட்டங்கள் எவையும் இல்லை. ஓராண்டு கால ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரம் வாழ முடியாத அளவில்தான் உள்ளது.

வீட்டு வரி உயர்வு
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டிற்குள் வீட்டு வரி 100 மடங்கு உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் இனி வரி கட்ட வேண்டும் என்ற திமுக அரசின் செயல்பாடு மக்களை மேலும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.எ தையும் சரிப்படுத்தாத ஒரு அரசாக திமுக அரசு ஓராண்டு ஆட்சி செய்து வருகிறது என விமர்சனம் செய்தார்.

கட்டுமானப்பொருட்கள் விலை உயர்வு
அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நூறு மடங்கு உயர்ந்துள்ளது. முக்கியமாக கட்டுமான தொழிலை நம்பி இருந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

பேருந்து, மின்சார கட்டணம் உயரும்
நிதிப்பற்றாக்குறை வரும்போது, அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர், நிச்சயமாக அதனை உயர்த்துவார்கள். ஏற்கெனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். எனவே விரைவில் பஸ் கட்டணம் உயரும், மின் கட்டணமும் உயர்த்தப்படும். காரணம் அதுவும் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு பால் விலையையும் உயர்த்தப்போகின்றனர்.