ஆர்.பி.உதயகுமாருக்கு அடித்த யோகம்! கட்சியில் கிடு கிடு! சேலம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை இவராம்!
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெறவுள்ள அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு மதுரையை சேர்ந்த ஆர்.பி.உதயகுமாரை தலைமை தாங்க வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மதுரை அதிமுக மாநாடு எதிர்பார்த்ததை விட சிறப்பான முறையில் நடந்து முடிந்ததால், எடப்பாடி பழனிசாமியின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார் ஆர்.பி.உதயகுமார். இதன் வெளிப்பாடாக தான் ஆர்.பி.உதயகுமாருக்கு மாநிலம் தழுவிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சேலம் மாவட்ட ஆத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
''சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகராட்சிக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் ஆத்தூர் நகராட்சி பெரிய நகராட்சியாகும். அதனையொட்டி அமைந்துள்ளது நரசிங்கபுரம் நகராட்சி.
விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்யாததால், மக்கள் குடிநீர் இன்றியும், மோசமான சாலைகளும், தெருவிளக்குகள் எரியாமலும், போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லாமல் தேங்கும் குப்பைகளாலும், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஆத்தூர் நகராட்சிக்கு ஆணையர் இல்லை; பொறியாளர் இல்லை; பணி மேற்பார்வையாளர் இல்லை; நகர அமைப்பு அலுவலர் இல்லை; பணி ஆய்வாளர் இல்லை; வருவாய் ஆய்வாளர் இல்லை. இதன் காரணமாக, அனைத்து முக்கிய பணியிடங்களும் நீண்ட நாட்களாக காலியாகவே உள்ளது. இத்தனைக்கும் சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருப்பவர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள்.
ஆனால், தமிழ் நாட்டிலேயே முக்கிய அதிகாரிகள் இல்லாமல் தடுமாறும் நகராட்சி ஆத்தூர் நகராட்சி ஆத்தூர் நகர மக்கள் தங்கள் குறைகளை எங்கே சென்று சொல்லுவது என்பதுகூட புரியாமல் உள்ளனர்.

எனவே, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளின் அவல நிலைமைக்குக் காரணமான விடியா திமுக அரசையும்; நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும்; நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களையும் கண்டித்து; நகராட்சிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி, அதிமுக சார்பில் 7.9.2023 - வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில், ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமானR.B. உதயகுமார், M.L.A.,தலைமையிலும்; சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் R. இளங்கோவன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.P. ஜெயசங்கரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications