பாஜக கூட்டணி- வாசனுக்கு எதிர்ப்பு- இபிஎஸ் உடன் தமாகா யுவராஜ் திடீர் சந்திப்பு- அதிமுகவுக்கு தாவல்?
சேலம்: பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) இணைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அக்கட்சித் தலைவர் ஜிகே வாசன் அறிவித்த சிறிது நேரத்திலேயே தமாகாவின் இளைஞரணி செயலாளர் யுவராஜ் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவுடனான கூட்டணியால் அதிருப்தி ஏற்பட்டதாலேயே எடப்பாடி பழனிசாமியை யுவராஜ் சந்தித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது என்பது ஜிகே வாசனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. சென்னையில் ஜிகே வாசனை நேற்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார் ஜிகே வாசன். பின்னர் வாசனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெறும் பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் ஜிகே வாசன் பங்கேற்கிறார்.

எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு: பாஜக கூட்டணியில் இணைவதாக ஜிகே வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிறிது நேரத்திலேயே அவரது தமிழ் மாநில காங்கிரஸின் மாநில செயலாளர் யுவராஜ், சேலத்தில் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பாஜகவுடன் ஜிகே வாசன் இணக்கமான நட்புறவில் இருந்த போதே சிபிஎஸ்இ தேர்வு முடிவு உள்ளிட்டவைகளில் பிரதமர் மோடியையும் மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்தவர் யுவராஜ். தற்போது பாஜக கூட்டணியில் ஜிகே வாசன் சேருவதாக அறிவித்த உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை யுவராஜ் சந்தித்து பேசியிருக்கிறார்.
மரியாதை நிமித்தம்: இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக மட்டும் தாம் சந்தித்து பேசியதாக கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியுடனான பேச்சுவார்த்தை விவரங்களை யுவராஜ் வெளிப்படுத்தவில்லை.
அதிமுகவுக்கு தாவுகிறார் யுவராஜ்?: இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, எந்த கூட்டணியில் சேரலாம் என தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுவில் ஜிகே வாசன் வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான நிர்வாகிகள், அதிமுக கூட்டணிக்கு போகலாம் என தெரிவித்திருந்தனர். ஆனால் தமாகாவின் பெரும்பாலான நிர்வாகிகள் முடிவுக்கு மதிப்பு தராமல், பாஜக கூட்டணியில் இணைவதாக ஜிகே வாசன் அறிவித்துவிட்டார். இதில் தமாகா நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர்தான் யுவராஜ். அவரைப் பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் இணைந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெல்வது என கணக்கு போட்டு காத்திருந்தாராம். ஆனால் ஜிகே வாசனின் இந்த திடீர் அறிவிப்பு அவரை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது. இதனாலேயே ஜிகே வாசன் அறிவித்த உடனேயே எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் நேரில் சந்தித்து பேசினார் யுவராஜ். தமாகாவில் இருந்து விலகி யுவராஜ் அதிமுகவில் இணையலாம்; ஈரோடு மாவட்டத்தில் அதிமுக வேட்பாளராகவும் யுவராஜ் அறிவிக்கப்படலாம். யுவராஜைத் தொடர்ந்து தமாகா நிர்வாகிகள் மேலும் பலர் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளில் இணையவும் கூடும் என்கின்றன. யுவராஜின் இந்த திடீர் சந்திப்புதான் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் தற்போது ஹாட் டாப்பிக்.












Click it and Unblock the Notifications