சிஎம் சார் காப்பாத்துங்க..உயிருக்கு போராடிய சிறுமி.. ஸ்டாலின் பேசுறேன்மா- போன் செய்து உதவிய முதல்வர்
சேலம்: சேலத்தில் பெற்ற அப்பாவால் கைவிடப்பட்டு.. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுமிக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயிர் அச்சத்தில் சிறுமி வீடியோ வெளியிட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த சிறுமிக்கு போன் செய்து பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சேலம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் - ராஜநந்தினி தம்பதியின் மகள் ஜனனிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு கிட்னி பாதிப்பு அடைந்தது. ஒரு கிட்னி செயல் இழந்த நிலையில், உடல் குறைபாடு காரணமாக சில மாதங்களில் இன்னொரு கிட்னியும் பாதிப்பு அடைந்தது. இந்த நிலையில் தொடர் சிகிச்சைகள் அளித்தும் இவரை குணப்படுத்த முடியவில்லை.
வறுமையான குடும்ப பின்னணி கொண்டவர் என்பதால் ஜனனிக்கு மேற்கொண்டு சிகிச்சையும் வழங்க முடியவில்லை. இதனால் அந்த சிறுமி உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பா
மகளுக்கு தொடர்ந்து செலவு செய்து.. வீட்டில் சண்டை ஏற்படவே விஜயகுமார் தனது மகளையும் மனைவியையும் விட்டுவிட்டு தனியாக பிரிந்து சென்றார். இதனால் சிறுமியின் தாயார் ராஜநந்தினி மட்டும் தனி நபராக இருந்து ஜனனியின் சிகிச்சைகளை கவனித்துக் கொண்டு வந்தார். ஜனனிக்கு தேவையான தற்காலிக மருத்துவ உதவிகளை வழங்கி வந்தார். ஆனாலும் இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டதால் உடனடியாக மேல் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த சிறுமிக்கு இருந்தது.

வருமானம்
போதிய வருமானம் இல்லை.. அப்பாவும் கைவிட்டுவிட்டார் என்ற நிலையில் அந்த சிறுமி நேரடியாக முதல்வர் ஸ்டாலினிடம் உதவி கேட்டுள்ளார். முதல்வரிடம் உதவி கேட்டு அவர் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் . அந்த வீடியோவில் தனது தாயாருடன் அமர்ந்து இருக்கும் ஜனனி.. வணக்கம் சிஎம் சார்.. என் பேரு ஜனனி. நான் சேலத்தில் இருக்கிறேன். எனக்கு இரண்டு வருடத்திற்கு முன் கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டது. என்னை காப்பாற்றுங்கள்.

ப்ளீஸ் சிஎம் சார்
ப்ளீஸ் சிஎம் சார்.. என்னை எல்லோரும் செத்துவிடுவேன் என்று சொல்கிறார்கள். என்னை காப்பற்றுங்கள் சார். எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா சார்? என்று அந்த சிறுமி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட வீடியோ வெளியிட்டு இருந்தார். உயிருக்கு போராடிய நிலையில் அந்த சிறுமி வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் கண்ணீர் விட வைக்கும் வகையில் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சில மணி நேரங்களில் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு அந்த வீடியோ கொண்டு செல்லப்பட்டது.

உதவி
விஷயம் கேள்விப்பட்டதும் முதல்வர் ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் அந்த சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி கூறினார். அந்த சிறுமிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார். முதல்வரின் உத்தரவின் பெயரில் உடனடியாக அந்த சிறுமி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை
தற்போது அந்த சிறுமிக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் அந்த சிறுமிக்கு சோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டு, மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அந்த சிறுமிக்கு போன் செய்த முதல்வர் ஸ்டாலின்.. நான் ஸ்டாலின் பேசுறேன்மா.. தைரியமா இருமா. எதுக்கும் கவலைப்படாத.

கவலை வேண்டாம்
பயப்படாமல் தைரியமாக இரு. எல்லாம் சரியாகிவிடும். டெஸ்ட் வெயிட்டிங்கில் உள்ளது. முடிந்ததும் சிகிச்சை நடந்துவிடும். ஹெல்த் மினிஸ்டரிடம் பேசி இருக்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம். தேவையான மருத்துவ உதவி கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அந்த சிறுமிக்கு நம்பிக்கை அளித்தார். உயிருக்கு போராடி கண்ணீர்விட்ட சிறுமிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக போன் செய்ததோடு மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications