பெற்ற தந்தையே செய்த கொடூர சம்பவம்.. சேலம் அருகே 2 குழந்தைகள் வெட்டிக் கொலை.. 2 பேர் படுகாயம்!
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறில் 2 பிள்ளைகளை தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 5 வயது சிறுவன், 13 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். நெய்வேலியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி தவமணி (38). இந்த தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், வித்யதாரணி (13), அருள் குமாரி (10), அருள் பிரகாஷ் (5) என மூன்று மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே அசோக் குமார் - தவமணி தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்படுகிறது. அசோக் குமார் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை தவமணி, அவரது பிள்ளைகள் கதறியுள்ளனர்.
சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், அப்பகுதி மக்கள், வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு, அரிவாளால் வெட்டப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர். பின்னர் அப்பகுதி மக்கள் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அரிவாளால் வெட்டப்பட்ட 5 வயது சிறுவன் அருள் பிரகாஷ், 13 வயது சிறுமி வித்யாராணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தவமணி, அருள் குமாரி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அசோக் குமார் தலையில் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். குடும்பத் தகராறில் தந்தையே, பிள்ளைகளையும், மனைவியையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
தனது சொந்த ஊரில் உள்ள சொத்து பிரச்சனை சம்பந்தமாக கணவன் மனைவி இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ள நிலையில் இன்று அதிகாலை நெய்வேலியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த அசோக் குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை அறிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
கணவன் - மனைவி சண்டையில், அசோக் குமார் பிள்ளைகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தினரா என்பது குறித்தும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications