முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை.. 67 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் நடந்த சம்பவம்!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை இன்று மாலை எட்டியது. அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக நிரம்பியுள்ளது. இதனையடுத்து, 58 அயிரம் கன அடி உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டது.
ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக 1957 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி இருந்தது.

காவிரி ஆற்றில் நீர் வரத்து
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மற்றும் கேரள மாநில மலை பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த வாரம் நிரம்பின. இதையடுத்து அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்தும் 80 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்கு மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்து புது வெள்ளம் பாய்கிறது. மேலும் காவிரியின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க இன்று 10வது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து குறைந்து வருகிறது. நேற்று காலை ஒகேனக்கல்லில் 78 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 65 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக அணைகளின் உபரிநீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை வினாடிக்கு 80,984 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.2 கன அடியாக இருந்தது. வினாடிக்கு 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இதையடுத்து இன்று மாலை 6 மணியளவில் மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை கட்டிய 91 ஆண்டு கால வரலாற்றில் 44வது முறையாக நிரம்பியுள்ளது. ஜூன் மாதத்தில் அணை முழு கொள்ளளவை எட்டியது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பாக 1957ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி இருந்தது.
மேட்டூர் அணை நிரம்பியதும் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணையில் இருந்து 58 ஆயிரம் கன அடி உபரி நீர் 16 கண் மதகு வழியாக வெளியேறியது. உபரி நீர் வெளியேறுவதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் கலெக்டர் பிருந்தா தேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் அணை பொறியாளர்கள் பார்வையிட்டனர்.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி பாயும் 11 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் வலது மற்றும் இடது புற கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் முன்கூட்டியே கால்வாய் பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications