சேலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே.. தூத்துக்குடி இளைஞர் துடிக்க துடிக்க கொலை.. மனைவி கண்முன்னே கொடூரம்!
சேலம்: சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்த தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் மனைவியின் கண்முன்னே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது மனைவியுடன் அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது ஹோட்டலுக்குள் புகுந்த நபர்கள் பட்டப்பகலில் இந்த சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
காலை வேளையிலேயே தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விரைந்து வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அஸ்தம்பட்டி காவல் நிலையம்
தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் மதன் என்ற அப்பு. மதன் மீது தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்ற மதன், சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் மதன் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 10 ஆம் தேதியில் இருந்து அவர் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் தான் வழக்கம் போல் இன்றும் மதன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தார்.
துடிக்க துடிக்க வெட்டி கொலை
மனைவியுடன் வந்திருந்த மதன், காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டுவிட்டு வெளியே வந்தார். இதையடுத்து சாப்பிடுவதற்காக காவல் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட சென்றுள்ளார். மனைவியுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்குள் நுழைந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் மதனை நோக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். நாலாபுறமும் சுற்றி நின்று வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் மதன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். தன் கண் முன்னே கணவரை மர்ம நபர்கள் வெட்டி கொல்வதைப் பார்த்து அவரது மனைவி அச்சத்தில் கதறி அழுதார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அந்த கும்பலினர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். தொடர்ந்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேலம் அஸ்தம்பட்டி போலீசார் உடனடியாக அங்கு வந்து விசாரணையை தொடங்கினர். இதேபோல் சேலம் மாவட்ட போலீசாரும் உடனடியாக வந்து விசாரணை நடத்தினர். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
தடயவியல் துறையினரும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதி. அந்த உணவகத்துக்கு எதிரில் தான் பஸ் சேலம் மாநகர பேருந்து பணிமுனையம் உள்ளது. உழவர் சந்தையும் அருகில் தான் உள்ளது.
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காலை நேரத்தில், 6 பேர் கும்பலால் இளைஞர் ஒருவர் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. கொலையாளிகள் 6 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications