மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ள அட்டைகள்.. திமுக இளைஞரணி மாநாட்டில் கண்ணாடி அறை.. என்னனு தெரியுதா?
சேலம்: சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில், நீட் விலக்கு முக்கிய இடம் பிடித்துள்ளது. திமுக சார்பில் பெறப்பட்ட கையெழுத்து அட்டைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வால் உயிர் நீத்த மாணவர்களின் படங்கள், முகப்பு வாயில்களில் வைக்கப்பட்டுள்ளன.
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக இளைஞரணியின் மாநில மாநாட்டை காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி 100 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றினார். மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து பல தலைவர்கள் உரையாற்றுகின்றனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மாலையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
முக்கிய இடம் பெற்ற நீட்: மேலும், இந்த மாநாட்டில் நீட் எதிர்ப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது. நீட் விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. நீட் தேர்வால் உயிர் நீத்த அனிதா உள்ளிட்ட மாணவர்களின் படங்கள் முகப்பு வாயில்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், நீட் தேர்வுக்கு எதிராகப் பெற்ற 85 லட்சம் பேரின் கையெழுத்துகளை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளார் உதயநிதி. அதன் பின்னர் அது குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட உள்ளது.
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கையெழுத்து இயக்கம்: 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. நிர்ணயித்த இலக்கைக் கடந்து சுமார் 85 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட கையெழுத்து அட்டைகள், இளைஞரணி மாநாட்டு திடலில் தனி இடத்தில், மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
திமுக இளைஞரணி மாநாட்டு திடலில், கண்ணாடியால் மூடப்பட்ட இடத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி திமுக சார்பில் பெறப்பட்ட கையெழுத்து அட்டைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மலைபோல குவிந்திருக்கும் இந்த அட்டைகளை மாநாட்டிற்கு வருபவர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். இதன் வெளியே #BanNEET என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications