சேலத்தில் பி.இ அக்ரி டீச்சர்.. பின்னாடியே வந்த காதலன்.. ஒதுங்கி போன பெண்ணுக்கு இப்படியா நடக்கணும்
சேலம்: உயர்கல்வி பயின்று ஆசிரியையாக பணியாற்றி வந்த ஒரு இளம் பெண், தனது திருமண வாழ்வை தடுக்க முயன்ற முன்னாள் காதலனின் அச்சுறுத்தலால் இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.. இச்சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் இளைஞர் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றாலும், சேலத்தில் இந்த அதிர்ச்சி குறையவிலலை..
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா.. 22 வயதான இவர் பி.இ அக்ரி படித்துவிட்டு தனியார் பள்ளி ஒன்றில் டீச்சராக பணியாற்றி வந்தார்..

சேலம் அக்ரி டீச்சர்
இவரது அப்பா குமார் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அம்மா விஜயலட்சுமிதான் மகளை வளர்த்து ஆளாக்கி டீச்சராக்கி உள்ளார்.. சண்முகப்பிரியா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஞானமணி கல்லூரியில் பயின்றபோது அவருக்கும் நங்கவள்ளி அருகேயுள்ள அமரகுந்தி நெய்க்காரவளவைச் சேர்ந்த கௌதம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது..
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் பழகி வந்துள்ளனர்.. ஆனால் காலப்போக்கில் கௌதமின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தால் சண்முகப்பிரியா அவருடன் பேசுவதை தவிர்த்து காதலையும் கைவிட்டுள்ளார்..
பின்னாடியே வந்த காதலன்
ஆனால் இதனை ஏற்க மறுத்த கௌதம் தன்னை கல்யாணம் செய்துகொள்ளுமாறு சண்முகப்பிரியாவிற்குத் தொடர்ந்து காதல் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்..
ஒருகட்டத்தில் சண்முகப்பிரியாவின் அம்மா விஜயலட்சுமி, கௌதமின் வீட்டிற்கே நேரில் சென்றுவிட்டார்.. இனிமேல் தங்கள் வீட்டுப் பக்கம் வரக்கூடாது, தன் மகள் பின்னால் சுற்றக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார்.. ஆனாலும் கௌதம் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் சண்முகப்பிரியாவை செல்போன் வாயிலாக தொடர்ந்து மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்..
இதற்கிடையே சண்முகப்பிரியாவின் வீட்டார், உடனடியாக திருமணம் செய்து வைக்கத் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.. இந்த விஷயம் கௌதமுக்குத் தெரியவரவே அந்தத் திருமணத்தை தடுக்க அவர் பல முயற்சிகளை எடுத்துள்ளார்..
இளம்பிள்ளை பள்ளி ஆசிரியை
மேலும் சண்முகப்பிரியாவின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று ஆபாச மிரட்டல் விடுத்துள்ளார்.. காதலனின் இந்தத் தொடர் டார்ச்சர் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு விடுவார் என்ற பயத்தால் சண்முகப்பிரியா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்..
கடந்த திங்கள்கிழமை காலை யாரும் இல்லாத நேரத்தில் சண்முகப்பிரியா தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகுடஞ்சாவடி போலீசார் சண்முகப்பிரியாவின் சடலத்தை மீட்டுப் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
பரிதாபம் - தாய்
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட சோதனையில் சண்முகப்பிரியா எழுதி வைத்திருந்த 4 பக்க தற்கொலை கடிதம் சிக்கியது.. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த உருக்கமான கடிதத்தில் தனது இறப்பிற்கு கௌதம் தான் முழு காரணம் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்..
சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் சண்முகப்பிரியாவின் செல்போன் மற்றும் அவர் எழுதி வைத்த கடிதத்தைக் கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
தலைமறைவாக உள்ள கௌதமைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.. ஒரு தனியார் பள்ளி ஆசிரியை காதலின் பெயரால் மிரட்டப்பட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இளம்பிள்ளை மற்றும் மகுடஞ்சாவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..












Click it and Unblock the Notifications