ஸ்டாலின் "அசைன்மென்ட் 60".. சத்தமே இன்றி கேஎன் நேரு பார்த்த வேலை.. எடப்பாடிக்கு "இப்படி" ஒரு செக்கா!
சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் மேற்கொண்ட அரசியல் பணிகள், அம்மாவட்ட வெற்றி அனைத்தும் பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் அமைச்சர் கேஎன் நேரு சத்தமே இன்றி இந்த சட்டசபை தேர்தலில் சம்பவம் ஒன்றை செய்து இருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளிவந்தன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது. திமுகவிற்கு இதைவிட பெரிய மகிழ்ச்சி என்றால் அது கொங்கு மண்டல வெற்றிதான்.
மொத்தமாக கொங்கு மண்டலத்தை கைப்பற்றி திமுக சாதனை படைத்துள்ளது. திமுக இங்கெல்லாம் வெற்றிபெற சான்ஸே இல்லை. இது வேலுமணி கோட்டை.. எடப்பாடி பழனிசாமியின் ஏரியா என்றெல்ல்லாம் கூறப்பட்ட கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றி உள்ளது.

கேஎன் நேரு
இதனால்தான் நேற்று தமிழ்நாடு முழுக்க பெரிய அளவிலான வெற்றியை திமுக வென்று இருந்தாலும் முதல்வர் ஸ்டாலின் என்னவோ கொங்கு வெற்றியை பற்றி தனியாக பேசினார். அதிமுகவின் கோட்டை என்று சொன்ன கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளோம் என்று கொங்கு மண்டல வெற்றியை பற்றி மகிழ்ச்சியாக ஸ்டாலின் பேசினார். கொங்கு வெற்றி என்றால் கோவை வெற்றி மட்டும் கிடையாது. மற்ற கொங்கு மாவட்டங்களிலும் திமுகதான் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

சேலம் திமுக
முக்கியமாக சேலத்திலும் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. சேலத்தில் மொத்தமாக 60 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இந்த 60ல் 49 வார்டுகளை திமுக + காங்கிரஸ் பெற்றுள்ளது. திமுக தனியாக 47 வார்டுகளை வென்றுள்ளது. இன்னொரு பக்கம் அதிமுக வெறும் 7 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதேபோல் 165 நகராட்சி வார்டுகளில் 96 வார்டுகளை திமுக, 4 வார்டுகளை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. அதிமுக வெறும் 34 நகராட்சி வார்டுகளை மட்டுமே வென்றுள்ளது.

அமைச்சர் கே. என் நேருதான்
அதேபோல் 470 பேரூராட்சி வார்டுகளில் 278 வார்டுகளில் திமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 13 வார்டுகளை வென்றுள்ளது. 103 வார்டுகளை சேலம் பேரூராட்சியில் திமுக வென்றுள்ளது. இதனால் மொத்தமாக நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி என்று அனைத்தையும் சேலத்தில் திமுக கைப்பற்றி உள்ளது. சேலத்தில் திமுகவின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் திமுக அமைச்சர் மூத்த தலைவர் கே. என் நேருதான் .

அசைன்மென்ட்
முதல்வர் ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக நேருவைத்தான் சேலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமித்து இருந்தார். 60க்கு 60 இடங்களையும் பிடிக்க வேண்டும் என்று நேருவிற்கு ஸ்டாலின் அசைன்மென்ட் கொடுத்ததாக அப்போதே செய்திகள் வந்தன. இதற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக நேரு தீவிரமாக பணிகளை செய்து வந்தார்.ஆனால் இவர் திருச்சியிலும் தேர்தல் பணிகளை செய்தததால் சேலத்தில் இவர் செய்த களப்பணிகள் அதிமுக தரப்பிற்கு தெரியாமலே இருந்தது.

மாறி மாறி பணிகள்
இதுவும் ஒரு வகையில் திமுகவிற்கு சாதமாக அமைந்தது. காலையில் திருச்சியில் இருந்த மாலையே சேலம் சென்று தேர்தல் பணிகளை மாறி மாறி கவனித்து வந்தார். சேலம் திமுக அடிமட்ட நிர்வாகிகள் அத்தனை பழக்கம் இல்லை என்றாலும், அவர்களை ஆரம்பத்திலேயே அழைத்து பேசி அவர்களை சகஜமாக தேர்தல் பணிகளை செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. அதிலும் முன்னாள் முதல்வர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மாவட்டம் என்பதால் இங்கு கே. என் நேருவிற்கு முழு ஃப்ரீ ஹேண்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஃப்ரீ ஹேண்ட்
அதிமுக இதனால் இங்கு அதிக சிரத்தை எடுத்து தேர்தல் பணிகளை செய்தது. அதிலும் அதிமுகவிற்கு இங்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுகவிற்கு இருப்பதோ வெறும் 1 எம்எல்ஏ. இதனால் திருச்சியில் இருந்தும் நேரு முக்கிய நிர்வாகிகளை சேலத்திற்கு பார்சல் செய்து பணிகளை செய்து இருக்கிறார்கள். அதிமுக "ஸ்வீட் பாக்ஸ்களை" களமிறக்கிய நிலையில் இன்னொரு பக்கம் அனைத்து விதமான "பவர்களையும்" இங்கு திமுக களமிறக்கி உள்ளது. இத்தனையும் சத்தமே இன்றி நடந்துள்ளது. கோவையில் கடைசி கட்டத்தில் வேலுமணி செய்த தர்ணா போன்ற எந்த ஆர்ப்பாட்டங்களும் இன்றி சேலத்தை திமுக கைப்பற்றி உள்ளது.

ஆர்ப்பாட்டம் இல்லை
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தமிழ்நாட்டில் வென்று ஆட்சியை பிடித்தாலும் சேலத்தில் அதிமுகதான் வென்றது. சேலத்தில் 11 தொகுதிகள் உள்ளன. இதில் மாவட்டத்தில் சேலம் வடக்கு தொகுதியில் திமுக வென்றது. இந்த தொகுதி தவிா்த்து, இதர 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி,, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 தொகுதிகளில் அதிமுகதான் வென்றது.

எடப்பாடிக்கு செக்
இப்படிப்பட்ட சேலத்தில்தான் இந்த முறை திமுக மாநகராட்சியை பிடித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் நெடுஞ்சாலை நகர் வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். சேலத்தில் திமுக என்ற கட்சியே இல்லை என்ற நிலை மாறி.. வெறும் 45 நாள் உழைப்பு மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த வார்டில் கூட அதிமுக வெற்றிபெற முடியாத அளவிற்கு நேரு அவருக்கு செக் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications