ரசீது கூட இல்லாமல் 100 கோடியை தூக்கி கொடுத்த சேலம் மக்கள்? அம்மா பேட்டை மண்டபத்தில் என்ன நடந்தது?
சேலம்: சேலத்தில் பணம் இரட்டிப்பு மோசடி விவகாரத்தில் ரசீது கூட இல்லாமல் 100 கோடி வரை மக்கள் தூக்கி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் ஏழு மாதத்தில் இரட்டிப்பாக தருவதாக மோசடி நடந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது என்று விவரமாக பார்ப்போம்.
சதுரங்க வேட்டை படம் பாணியில் ஆசையை தூண்டி மக்களை ஏமாற்ற முயன்றதாக ஒரு கும்பல் சேலத்தில் வசமாக சிக்கியுள்ளது. சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தை ஒரு கும்பல் வாடகைக்கு எடுத்துள்ளது. அங்கு புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கடந்த இரண்டு வருடங்களாக பணத்தை வசூல் செய்து வந்துள்ளார்களாம்.. இந்த அறக்கட்டளையின் நிறுவனரான வேலூரைச் சேர்ந்த விஜயா பானு என்பவரும், துணை நிறுவன தலைவராக ஜெயப்பிரதா , செந்தில் குமார், பாஸ்கர் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்களாம்..

இவர்கள் தமிழக அரசின் எந்த விதமான அனுமதியும் பெறாமல், முதலீடு வசூலித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.. இங்கு இலவச தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளை புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையினர் வழங்கி கொண்டிருந்தார்களாம்.. இது தொடர்பாக அந்த பகுதி மக்களை அழைத்து பயிற்சி அளித்து வந்தார்களாம்.. மேலும் அந்த பகுதி பெண்களுக்கு பாக்கு தட்டு தயாரித்தல், மெழுகு வர்த்தி தயாரித்தல் உள்பட பல்வேறு பயிற்சிகளை இலவசமாக அளிப்பதாக கூறி ஏராளமான பெண்களை குறிப்பிட்ட தனியார் மண்டபத்திற்கு வரவழைத்துள்ளார்களாம்.
அங்கு வந்தவர்களிடம் சாப்பாடு போட்டதுடன், டெபாசிட் செய்தால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்களாம்.. தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் பணம் போட்டால் ஏழு மாதத்தில் பணம் இரட்டிப்பு ஆகும் என்று கூறினார்களாம்.. மேலும் மாதம் 30000 வீதம் ஏழு மாதத்திற்கு 2லட்சத்து 10 ஆயிரம் தருவதாகவும் கூறினார்களாம். அதேபோல் 50000 பணம் செலுத்தினால், ஏழு மாதத்திற்கு 15000 பணம் வீதம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்களாம்..
10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், அதற்கு 3000 ரூபாய் வீதம் ஏழு மாதத்திற்கு தருவதாகவும் கவர்ச்சி வாக்குறுதிகளை அவர்கள் அள்ளி வீசினார்களாம்.. மேலும் முதலீடு செய்பவர்களை நம்ப வைக்க பரிசு தொகையாக தங்க நாணயம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதை உண்மை என்று நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர்.
அதேநேரம் முறையாக ஒவ்வொருவருக்கும் கடந்த சில மாதங்களாக மாதம் மாதம் பணம் கிடைத்து வந்தால், எந்த அச்சமும் இன்றி, தொடர்ந்து ஆயிக்கணக்கான மக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளார்கள். இந்நிலையில நேற்று புதிய கவர்ச்சிகரமான அறிவிப்பினை அறக்கட்டளை குழுவினர் வெளியிட்டார்களாம். அதன்படி ஒரு லட்சம் செலுத்தினால், இரண்டு மாதத்தில் இரண்டு லட்சம் தருவதாக அறிவித்தார்களாம்..
இந்த அறிவிப்பினை கேட்டு தான் ஏராளமான மக்கள் அம்மாபேட்டையில் உள்ள சிவகாமி என்ற மண்டபத்திற்கு சென்று முதலீடு செய்துள்ளார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று என்ன நடக்கிறது என்று கண்காணித்துள்ளனர். அப்போது அங்கிருந்த மக்கள் ஆய்வு செய்த போலீசாரை தாக்கியாக கூறப்படுகிறது.. இதையடுத்து சேலம் மாநகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் 150க்கு மேற்பட்ட போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டது. அப்போது போலீசாரிடம் மக்கள் கூறும் போது, எங்களை யாரும் ஏமாற்றவில்லை.. முறையாக பணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்களாம். மேலும் விசாரித்த போலீசாரை முதலீடு செய்த பொதுமக்கள் ஆத்திரப்பட்டு தாக்கினார்களாம். இதையடுத்து போலீசார் மண்டபத்தின் நுழைவு வாயிலை சாத்தியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்களை அவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து நிர்வாகிகளை சுமார் ஆறு மணி நேரம் விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் மண்டபத்தில் சோதனை செய்த போது, நேற்று ஒரு நாளில் மட்டும் 12 கோடி ரூபாய் ரொக்க பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி மற்றும் ஆயிரம் கிலோ அரிசி ஆகியவை இருந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேரையும் அரசின் அனுமதி பெறாமல், எந்த அங்கீகாரமும் இன்றி முதலீடு பெற்றதாக போலீசார் கைது செய்தனர்.
அவர்களை அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். அத்துடன் போலீசாரை தாக்கிய 10 பேர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் மோசடி குறித்து விசாரித்ததில், எந்த வித ரசீதும் இன்றி 100 கோடி வரை வசூலிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 100 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்கிறார்கள்.
கைதான விஜயா பானு வேலூரைச் சேர்ந்தவர் ஆவார். அவர் மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 3 வருடம் முன்பு தான் சேலத்திற்கு வந்துள்ளாராம். தொடர் விசாரணைக்கு பிறகே எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டிருக்கும் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். சுமார் 500 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்று ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால் முறையான ரசீது இல்லாததால் என்ன நடந்தது என்பது விசாரணைக்கு பிறகே தெரியவர வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications