சாமியார் முன் தரையில் அமர்வதில் தப்பில்லையே! அமைச்சர் கே.என்.நேருக்கு அண்ணாமலை ஆதரவு
சேலம்: பங்காரு அடிகளார் முன்பாக தமிழக அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்தது சரிதான் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில பக்தர்களிடையே பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. ஆண்டுதோறும் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டியபடி நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவிலிருந்தும் ஏராளமான பக்தர்களும் பங்காரு அடிகளாரிடம் ஆசிப்பெறுவதற்காக வருகை தருகின்றனர்.

தரையில் அமர்ந்த கே.என்.நேரு
இந்த நிலையில், தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு நேற்று பங்காரு அடிகளாரை சந்திக்க மேல்மருவத்தூருக்கு சென்றார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், பங்காரு அடிகளார் நாற்காலியில் அமர்ந்திருக்க, கே.என்.நேரு மாலை அணிந்தபடி தரையில் அமர்ந்திருந்தார்.

சமூக வலைதளங்களில் விமர்சனம்
அருகில் சோபா இருந்தும் அவர் அதில் அமராமல் தரையில் அமர்ந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. சுயமரியாதை போதித்த திமுகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான கே.என்.நேரு இப்படி சாமியார் முன் தரையில் அமரலாமா என பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இதற்கு திமுகவின் இணையதள நிர்வாகிகளும் விளக்கங்களை அளித்து வருகின்றனர்.

திமுக எம்.பி. மறைமுக சாடல்
இதுகுறித்து தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமாரும் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், "கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே." எனக் குறிப்பிட்டு உள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு
இந்த நிலையில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மதகுருமார்கள் முன்பு தரையில் அமர்ந்து அவரது கருத்துக்களை கேட்பது வரவேற்கக் கூடிய ஒன்று. அதை வைத்து திமுகதான் அரசியல் செய்கிறது. என்னை பொறுத்தவரை பங்காரு அடிகளார் முன் அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்து பேசியது சரிதான்" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா படங்களை அகற்றுவது தவறு
தொடர்ந்து பேசிய அண்ணாமலை "தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றுவது திமுகவின் வாடிக்கையான செயல். மத்திய அரசின் திட்டங்களுக்கு எப்படி ஸ்டிக்கர் ஒட்டுவதை திமுக அரசு தற்போது செய்து வருகிறதோ, அதைப்போலவே ஜெயலலிதா படங்களையும் அகற்றுகிறது.

திமுக அரசு இரட்டை வேடம்
மேகதாது அணை பிரச்சனையில் திமுக அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பதையே ஸ்டாலின் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த கேள்வியும் எழுப்பாமல் இருக்கிறார்." என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications