பூரித்துபோன ஸ்டாலின்.. கருணாநிதி கனவாச்சே! சிரித்த முகத்தோடு வரவேற்ற சேலம் சமத்துவபுரம் மக்கள்
சேலம்: மேட்டூர் செல்லும் வழியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், அங்குள்ள வீடுகளுக்கு சென்று மக்களிடம் பேசியது குறித்து நெகிழ்ச்சியோடு ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம், மேட்டூர் செல்லும் வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், கோனூர் ஊராட்சியில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு வகிக்கும் மக்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் நாளை மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சேலம் மாவட்டத்திற்கு சென்றார். இன்று காலை சேலம் மாநகரில் உள்ள பேரறிஞர் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த அவர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை சேலம் மாவட்டம், மேட்டூர் செல்லும் வழியில், கருணாநிதியால் 1998 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், கோனூர் ஊராட்சியில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்த சமத்துவபுரத்தை சீரமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் 2021-2022 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.47 லட்சம் செலவில் 94 வீடுகளுக்கு வெள்ளை அடித்தல் மற்றும் சிறு பழுது நீக்கப் பணிகளும், ரூ.44.20 லட்சம் செலவில் சாலை வசதி, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, சமத்துவபுர வளைவு ஆகிய இதர பொது கட்டமைப்புகளுக்கான பழுது நீக்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் இன்று சமத்துவபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த ஸ்டாலின், சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்களிடம் அங்குள்ள சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை குறித்து கேட்டறிந்தார். அப்போது, அம்மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாகவும், சமத்துவபுரத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுத்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டனர்.
சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப் பார்வையிட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) June 11, 2023
1998-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் - சாலைகள்… pic.twitter.com/NIUjAs1QHR
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள ஸ்டாலின், "சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப் பார்வையிட்டேன். 1998-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் - சாலைகள் உள்ளிட்டவற்றில் பழுது நீக்கிச் சீரமைக்கும் பணிக்குக் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்திருந்தோம்.
தற்போது அங்குள்ள மக்களைச் சந்தித்து, சாலை மற்றும் குடிநீர் வசதிகள் பற்றிக் கேட்டறிந்தேன். அப்போது அங்கிருந்த மக்கள் அனைத்து வசதிகளும் சிறப்பாக இருப்பதாகவும், சமத்துவபுரத்தைச் சீரமைத்ததற்கு நன்றியும் தெரிவித்தனர்.
அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நாடெங்கும் பரவி, நாடே சமத்துவபுரமாகிட வேண்டும் என்ற தமிழினத் தலைவர் கலைஞரின் கனவு என் எண்ணங்களில் ஓடியது. கலைஞர்100 இல் அவரது இலட்சியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, இன்னும் அறியாமையில் இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமத்துவச் சமுதாயம் அமைத்திட உழைப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications