தமிழ்நாடு வாகன ஓட்டிகளுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் எ.வ.வேலு.. என்ன தெரியுமா?
சேலம்: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இரண்டு வழிச்சாலைகள், நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன், நான்கு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நான்கு வழிச்சாலை
இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அமைச்சர் எ.வ.வேலு, இந்த 4 மாவட்டங்களின் நெடுஞ்சாலைத் துறை பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எ.வ.வேலு கூறியதாவது:- தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் 2 வழிச்சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.

தீவிர ஆய்வு
குறிப்பாக சேலம் உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை 20 இடங்களில் இரண்டு வழி சாலையாக உள்ளது.
இதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் குறித்து பொறியாளர் குழு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுங்கச்சாவடிகள் எண்ணிக்கை குறையும்
மேலும்,10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராம சாலைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை
அப்போது சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை குறித்து நிருபர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள். '' சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை என்பது கொள்கை முடிவு. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்'' என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications