இங்கேயும் விடலயே! எய்ம்ஸ் செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் படம்.. இளைஞரணி மாநாடு ட்ரோன் ஷோவில் சம்பவம்
சேலம்: சேலம் இளைஞரணி மாநாட்டையொட்டி இன்று ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. இதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாமல் இருப்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், முன்பு உதயநிதி ஸ்டாலின் செங்கலை காண்பித்த புகைப்படமும் இந்த ட்ரோன் ஷோவில் இடம்பெற்று இருந்தது.
சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நாளை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. சென்னையில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இந்த திமுக இளைஞரணி மாநாடு இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து திமுக இளைஞரணி மாநாடு நாளை நடத்துவதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மதியமே சேலம் வந்தடைந்தார். அவருடன் அவரது மகன் இன்பநிதியும் சேலம் வந்தார். இதனை தொடர்ந்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தடைந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து திமுக இளைஞரணி மாநாட்டின் சுடரை ஏற்றி வைத்தார். இதேபோல் நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 1,500 பேர் கொண்ட இருசக்கர வாகனப் பேரணியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் பிறகு மாநாட்டு திடலில், 1,500 ட்ரோன்களைக் கொண்டு ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது.
1500 ட்ரோன்களை கொண்டு பிரமாண்டமாக நடத்தப்பட்ட ட்ரோன் ஷோவில் திராவிட தலைவர்கள் புகைப்படமும் வானில் ஜொலித்தது. குறிப்பாக தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, உதயநிதி சூரியன் சின்னம், தமிழ்நாடு எல்லை வரைபடம் என ஒவ்வொன்றாக காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் புகைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்ட போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாமல் இருப்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசை விமர்சிக்கும் வகையில், எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை காண்பித்த புகைப்படம் இந்த ட்ரோன் ஷோவில் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்ததும் திமுக தொண்டர்கள் கரவொலி எழுப்பினர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ட்ரோன் ஷோவை கைதட்டி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வெறும் செங்கல் மட்டும் தான் வைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் பணிகள் தொடங்கவில்லை என்பதை காட்டும் வகையிலும் மத்திய அரசை விமர்சித்து எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒரே ஒரு செங்கலை தூக்கி காண்பித்து இருப்பார். அப்போது இது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications