கோடநாடு விவகாரத்தில் ‘ட்விஸ்ட்’.. தனபால் சொல்வது பொய்.. யாரோ தூண்டி விடுறாங்க.. மனைவி பரபர பேட்டி!
சேலம்: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தனது கணவர் தனபால் பேசுவது உண்மை இல்லை என்றும், யாரோ சிலரின் தூண்டுதலின் காரணமாகவே தனபால் இவ்வாறு பேசி வருவதாகவும் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலின் மனைவி செந்தாமரை செல்வி பரபர பேட்டி அளித்துள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவராகப் பணியாற்றிய கனகராஜின் அண்ணன் தனபால், சமீபத்தில் பல திடுக்கிடும் தகவல்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கூறினார். எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரில்தான் கோடநாடு பங்களாவிலிருந்து 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். அதில் சொத்து ஆவணங்கள் நிறைய இருந்தன. 5 பைகளை எடுத்து வந்து இரண்டு பைகளை சேலத்திலும், 3 பைகளை சங்ககிரியிலும் உள்ள முக்கிய புள்ளிகளிடம் கொடுத்துள்ளார் என தனபால் பரபரப்பு தகவல்களைக் கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி ஒருவரை வைத்து பேரம் பேசினார். கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை காட்டிக்கொடுக்க வேண்டாம், எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். நான் பணத்திற்கு ஆசைப்படுபவன் இல்லை. கோடநாட்டில் நடந்த உண்மை வெளிவர வேண்டும். இதை தடுக்க கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த முக்கியபுள்ளி மூலம் பேரம் பேச வந்தார். பேரம் பேசவேண்டாம் என்று அனுப்பி வைத்துவிட்டேன் எனத் தெரிவித்தார்.
தனபாலின் பேட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக் கூறி சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் தனபாலின் மனைவி செந்தாமரைச் செல்வி. பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக எனது கணவர் பேட்டி கொடுப்பது எனக்கு பயமாக உள்ளது. எனக்கு அவரோடு வாழப்பிடிக்கவில்லை.
ஏற்கெனவே அவரது தம்பி செய்த பாவத்திற்கு நான் இன்னும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். என்ன நடந்தது என்றே எனக்கு இதில் தெரியாது. இதற்கே இன்னும் நான் பதில் சொல்லி வருகிறேன். எனக்கு போலீசை பார்த்தாலே பயம் என்ற நிலையில் உள்ளேன். ஏன் பேட்டிக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டால் அடிக்கிறார். இதனால்தான் நான் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தேன். ஆனால் அவர்கள் புகாரை வாங்கவில்லை. அதனால் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தேன்.
கோடநாடு கொலை வழக்கை பொறுத்தவரை என் கணவர் பேசுவது எல்லாம் எனக்கு தெரிந்தவரை உண்மை இல்லை. கோடநாடு வழக்கு தொடர்பாக அவரிடம் எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கனகராஜ் இறப்பதற்கு 6 மாதம் முன்பு வரை சகோதரர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. கனகராஜ் மரணத்திற்கு முன்பு 6 மாதம் வரை என் கணவருடன் பேசாமல் இருந்தார்கள். அதற்கு பிறகு என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது.
எனது கணவர் பேசுவது பொய் என்றுதான் நான் நினைக்கிறேன். யாரோ சொல்லிக் கொடுத்து தனபால் சொல்வது போல் உள்ளது. இதுவரை இதுபற்றி எந்த விஷயத்தையும் வீட்டில் பேசியது இல்லை. ஆனால் இப்போது இது பற்றி புதிதாக அவர் சொல்கிறார். இது பற்றி என்னவென்றே தெரியாமல் என்னால் என்ன சொல்ல முடியும். எனது கணவரால் எனக்கு ஆபத்து உள்ளது. கொன்றுவிடுவார்களோ என்று எனக்கு பயமாக உள்ளது. எனது 2 மகள்களுக்கும் எனக்கும் பாதுகாப்பு வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications