கஞ்சா கடத்தல் வழக்கு: சிங்கப்பூர் தமிழர் தங்கராஜூ சுப்பையா தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
சிங்கப்பூர்: கஞ்சா கடத்தல் வழக்கில் தங்கராஜூ சுப்பையா என்ற தமிழருக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. தூக்கு தண்டனையை நடைமுறைப்படுத்தி வரும் சிங்கப்பூர் அரசுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த மலேசிய தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார். 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் டயாமார்ஃபைன் என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். டயாமர்ஃபைன் பொருள் மூலமாக போதைப் பொருள் தயாரிக்க முடியும். அதேநேரத்தில் இது புற்றுநோயால் ஏற்படும் வலிக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சிங்கப்பூரில் இப்பொருள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்பொருளை நாகேந்திரன் தமது தொடைப்பகுதியில் உறை ஒன்றில் கட்டி சிங்கப்பூருக்கு கடத்தி வந்தார் என்பது வழக்கு. இவ்வழக்கில் நாகேந்திரன் தர்மலிங்கம் குற்றவாளி என 2019-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம். இதனடிப்படையில் கடந்த் ஆண்டு நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து தங்கராஜூ சுப்பையா என்பவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். 2013-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து 1 கிலோ கஞ்சாவை தங்கராஜூ சுப்பையா கடத்தினார் என்பது வழக்கு. தங்கராஜூ சுப்பையாவிடம் கஞ்சா கைப்பறப்படவில்லை. ஆனால் கஞ்சாவை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம். 2018-ம் ஆண்டு தங்கராஜூ சுப்பையாவுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது முதல் பல்வேறு முறையீட்டு மனுக்களை அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்து வந்தனர். ஆனால் அத்தனை மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனை உறுதியானது. இன்று தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியது.

ஐநா மனித உரிமை அமைப்பு உள்ளிட்டவை தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தங்கராஜூ சுப்பையாவுக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications