சுட சுட பூரி.. ஒரு வாய் சாப்பிட்டா கூட சொர்கத்துக்கு போவீங்க.. மெய் மறந்த சிங்கப்பூர் அமைச்சர்
சிங்கப்பூர்: இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்திய உணவுகளை ரசித்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் இந்திய உணவுகளில் இருக்கும் மசாலாக்கள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது. அந்த வரிசையில் சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் எட்வின் டோங்கும் டெல்லி பயணத்தின்போது தனக்கு மிகவும் பிடித்த இந்திய காலை உணவை ருசித்துள்ளார். அதை அவர் மெய்மறந்து பாராட்டியும் இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வருகிறது. பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்தே செயல்பட்டு வருகின்றன. மேலும், நமது அரசு தலைவர்கள் சிங்கப்பூருக்கும், அந்நாட்டை சேர்ந்தவர்கள் இங்கு வருவதும் கூட வாடிக்கையாகவே இருக்கிறது. அப்படி சமீபத்தில் இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் அமைச்சர் தான் இந்திய உணவை வியந்து பாராட்டியுள்ளார்.

சிங்கப்பூர் சட்ட அமைச்சர்
சிங்கப்பூரின் சட்டத்துறை அமைச்சர் எட்வின் டோங் சமீபத்தில் டெல்லிக்கு வந்திருந்தார். அதிகாரப்பூர்வ பணிகளுக்காக வந்த அவர், தனது பயணத்திற்கு இடையே தனக்கு பிடித்தமான இந்திய உணவான பூரியை ரசித்து, ரசித்து சாப்பிட்டு இருக்கிறார். பொதுவாக வடஇந்தியாவில் பூரியை உருளைக்கிழங்கு அல்லது சோலேவுடன் சாப்பிடுவது பிரபலமானது. ஆனால் எட்வின் டோங் சற்று வித்தியாசமாகப் பூரியுடன் நமது தென்னிந்திய உணவான சாம்பாரை சேர்த்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு நமது டிரேட் மார்க் மசாலா டீயையும் ருசித்துள்ளார்..
பூரி வேற லெவல்
தனது காலை உணவின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த எட்வின் டோங், டெல்லியில் தனது அதிகாரப்பூர்வ பணிகளை முடித்துவிட்டு சிங்கப்பூர் திரும்பியதாக தெரிவித்துள்ளார். பூரியை மனம் விட்டு பாராட்டிய அவர், முழு கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பூரி தனக்கு மிகவும் பிடித்த காலை உணவு என்று தெரிவித்துள்ளார். மேலும், "சுவையான சாம்பார் மற்றும் மசாலா டீயுடன் சேர்த்து சாப்பிட்டால், இது சரியான காலை உணவு" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
இந்திய உணவை ரசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் அமைச்சரின் பதிவு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எட்வின் டோங்கின் பதிவை வரவேற்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். நெட்டிசன்கள் சிலர் பார்க்கவே மிகவும் சுவையாக இருக்கிறதே.. சாப்பிட்டால் எவ்வளவு டேஸ்டாக இருக்குமோ என வியந்து பாராட்டியுள்ளனர். மற்றொருவர், பூரியை ஆலு குர்மாவுடன் சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பூரி சூப்பர் தான். ஆனாலும், டெல்லியின் பிரபல உணவான சோலே பூரியை அவர் சாப்பிட்டிருக்க வேண்டும் என்றும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆலு பராத்தாவை சாப்பிட்டால் வாழ்க்கையில் அதை மறக்கவே மாட்டார் என மற்றொருவர் ட்வீட் செய்துள்ளார்.
முதல் தலைவர் இல்லை
அதேநேரம் இந்திய உணவை இப்படி மனதார புகழ்ந்து தள்ளும் ஒரே அமைச்சர் எட்வின் டோங் இல்லை. இதற்கு முன்பும் கூட பல சிங்கப்பூர் அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்திய உணவுகளை பாராட்டி தள்ளியுள்ளனர். இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதராக பணியாற்றிய சைமன் வோங்கும் தென்னிந்திய உணவுகள் பெஸ்ட் என தெரிவித்திருந்தார். குறிப்பாக அப்பம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதன் சுவை தனது சொந்த நாட்டை நினைவுபடுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications
