உலகமே உச்சரிக்கும் ஒற்றை பெயர்.. யார் இந்த தர்மன் சண்முகரத்னம்? சிங்கப்பூரை ஆளப்போகும் தமிழன்!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வென்றுள்ள தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் யார் என்பதையும், அவர் வாழ்க்கை வரலாறு குறித்தும் இப்போது பார்ப்போம்.
சிங்கப்பூரின் அதிபராக உள்ள ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் அண்மையில் நடந்தது . இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (GIC) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கொக் சொங் (76), NTUC இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான் கின் லியான் (75) ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இங் கொக் சொங் 16 சதவீத வாக்குகளும், டான் கின் லியான் 14 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம் சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பது உறுதியாகி உள்ளது.
சிங்கப்பூரின் அடுத்த அதிபராக தர்மன் சண்முகரத்னம் யார் என்பதை பார்ப்போம்.. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வென்றுள்ள தர்மன் சண்முகரத்னம் இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். 66 வயதாகும் தர்மன் சண்முகரத்னம் 2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக முதல்முதலாக தேர்வானார். இதுவரை நான்கு முறை அங்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் ஆலோசகர்" 2011ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவராக பணியாற்றி உள்ளார். பொருளியல் கொள்கைளை வகுப்பதில் சிங்கப்பூர் பிரதமரின் ஆலோசகராக தர்மன் சண்முகரத்னம் பணியாற்றி உள்ளார். சிங்கப்பூரில் நிதியமைச்சர், கல்வி அமைச்சராக இருந்தார். சிங்கப்பூரின் துணை பிரதமராகவும் பதவி வகித்தார்.
தற்போது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார். சிங்கப்பூரில் ஆட்சியில் உள்ள மக்கள் செயல் கட்சி ஆதரவுடன் போட்டியிட்டு தர்மன் சண்முகரத்னம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
தர்மன் சண்முகரத்னம் இளமை பருவம்: 66 வயதான தர்மன் சண்முகரத்னம் 1957ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். இவரது மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இளங்கலை பொருளியில் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொருளியல் பட்டமும் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரின் நாணய ஆணையத்தில் தான் தனது பணியை தொடங்கினார். இன்று அங்கு தலைமைப் பொருளாதார நிபுணராக மாறியவர் இன்று சிங்கப்பூர் நாட்டிற்கே அதிபராகி உள்ளார். உலகில் பல நாடுகளில் தமிழ் வம்சாவளியினர் கோலோச்சி வருகிறார்கள்.இதேபோல் இந்திய வம்சாவளியினரும் கோலோச்சி வருகிறார்கள். அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் உள்ளார். இவர் இந்தியாவின் தமிழ்நாட்டை வம்சாவளியாக கொண்டவர். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இன்போசிஸ் நாராயண மூரத்தியின் மருமகன் ஆவார். அதேபோல் ஐடி உலகில் தமிழர்களும் இந்தியர்களுமே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக உள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூர் அரசியல்வாதிகள் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆவர். அந்த நாடு லஞ்சம் மற்றும் ஊழலை சிறிதும் சகித்துக் கொள்ளாது. அப்படித்தான் உலக நாடுகளில் நல்ல பெயர் எடுத்துள்ளது.சிங்கப்பூரில் உள்ள அரசியல்முறைகள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் செயல்பாடுகள் தான் அந்ந நாடு உலகின் மிகப்பெரிய செல்வாக்கு உள்ள நாடாகவும், சிறந்த தொழில் மற்றும் திறமையாளர்களை கொண்ட நாடாகவும் திகழ்கிறது. அப்படி ஒரு நாட்டை ஆளும் பொறுப்பை தமிழரான தர்மன் சண்முகரத்னம் ஏற்கப்போவது தமிழர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.












Click it and Unblock the Notifications