பத்திரம் பதிவாகியும்.. காரைக்குடி பத்திரப்பதிவு ஆபீசில் அசிங்கப்பட்ட சார் பதிவாளர்.. திணறிய சிவகங்கை
சிவகங்கை: பதிவு செய்த பத்திரம் தருவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார் சார் பதிவாளர்.. இதையடுத்து, இவரை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்திருப்பது, காரைக்குடியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது..
தமிழகத்தில் நாளுக்கு நாள் போலியான பத்திரங்களை தயார் செய்து, உண்மையான பத்திரிகை போலவே உருவாக்கி மோசடிகள் பெருகி வருகின்றன. இதுபோன்ற மோசடிகளை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

போலி பத்திரங்கள்: போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு நிறைய முயற்சிகளையும் முன்னெடுத்தும் வருகிறது. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகியும் வருகிறார்கள்.
இதில், உயர் அதிகாரிகளே கைதாகி வருவது கவலையை தந்து வருகிறது.. அதிலும் பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கைதாவது அதற்கு மேல் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. பல கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயருக்கு மாற்றி பதிவு செய்தாக சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத், கைது செய்யப்பட்டிருக்கிறார்.
லஞ்சம் ஊழல்: 50 கோடி ரூபாய் நில அபகரிப்பு கும்பலுக்கு உடந்தையாக இருந்த பத்திரப்பதிவு டிஐஜி ரவீந்திரநாத்திடம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள், பல்வேறு லஞ்ச விவகாரத்தில் அரங்கேறி கொண்டிருக்கின்றன
நேற்றுமுன்தினம், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் கண்ணன் ( 43), துணை தாசில்தாரான அருள்பிரகாசம் (56) ஆகியோருக்கு சிறைதண்டனையே கிடைத்திருக்கிறது. டி.பவழங்குடியை சேர்ந்த கமுர்நிஷா என்ற கணவனை இழந்த பெண், அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு, உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக தனக்கும், தனது மகனுக்கும் இருப்பிட சான்று, வருமானம், சாதி சான்று கேட்டு இ-சேவை மையம் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.
துணை தாசில்தார்: அப்போது, இவரிடம் தலா ரூ.7 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என தாசில்தாரும், துணை தாசில்தாரும் கேட்டிருக்கிறார்கள். இந்த லஞ்ச புகாரில்தான் 2 அதிகாரிகளுக்கும், தலா 2 ஆண்டு சிறை தண்டனையை கடலூர் கோர்ட் வழங்கியிருக்கிறது.
நேற்றைய தினமும், காரைக்குடியில் சார் பதிவாளர் கைதாகி உள்ளார்.. காரைக்குடியைச் சேர்ந்த வைரவேல் என்பவர், தனக்குச் சொந்தமான சில இடங்களை விற்பனை செய்திருக்கிறார்.. இதற்கான பத்திரப்பதிவு காரைக்குடி சார்-பதிவாளர் அலுவலகம் எண்-2-ல் நடைபெற்றது. ஆனால், பத்திரப்பதிவு முடிந்து பல நாட்கள் ஆகியும் பத்திரம் வழங்கப்படவில்லை.
சார் பதிவாளர்: பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைரவேல் இதுகுறித்து கேட்டபோது, 60,000 ரூபாய் கொடுத்தால் தான் பத்திரம் தர முடியும் என சார் பதிவாளர் முத்துப்பாண்டி என்பவர் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வைரவேல், உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பிறகு போலீசார் அறிவுரைப்படி, பத்திரப்பதிவு அலுவலகம் சென்ற வைரவேல், சார் பதிவாளர் முத்துப்பாண்டியிடம் ரசாயனம் தடவிய 60 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் சார் பதிவாளர் முத்துப்பாண்டி மற்றும் பத்திர எழுத்தர் புவனப்பிரியாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அதிர்ச்சி: பதிவு செய்த பத்திரம் தருவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கி சார் பதிவாளர் கைதாகி உள்ளது அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. கடந்த 2 நாட்களில் மட்டும் லஞ்சம் வாங்கி கைதாகியிருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, தமிழக மக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications