பெண் அதிகாரி மீது இரும்பு சேரை தூக்கி தாக்க முயன்ற திமுக பிரமுகர்.. சிவகங்கை அருகே அதிர்ச்சி!
சிவகங்கை: சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் அதிகாரியை, சேரை தூக்கி வீசி திமுக பிரமுகர் தாக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை அருகே உள்ள சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகரான இவர், ஒப்பந்ததாரராக உள்ளார். பெருங்குடி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட முருகன், பணி முடிந்துவிட்டதாகவும், பணத்தை விடுவிக்குமாறும், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியிடம் நேற்று கேட்டுள்ளார்.

பணி அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருமாறு உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரி தெரிவித்ததால், முருகன் சத்தம் போட்டு பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முருகன், அங்கிருந்த இரும்பு சேரை எடுத்து, கிருஷ்ணகுமாரியைத் தாக்க முயன்றார். அலுவலக ஊழியர்கள் முருகனை தடுத்து வெளியே அழைத்து வந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காண்ட்ராக்டர், பெண் அதிகாரியை தாக்க முயன்றதைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள், தங்கள் பணியைப் புறக்கணித்து, ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பெண் அதிகாரியைத் தாக்க முயன்ற முருகனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது தொடர்பாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமாரி புகார் கொடுத்தார்.
காண்ட்ராக்டர் முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவோம் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications