மருது பாண்டியர் குருபூஜை விழா.. சிவகங்கையில் 6 தாலுக்கா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சிவகங்கை: மருது பாண்டியர் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று(அக்.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 27ம் தேதியன்று குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் 221வது குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள் பலர் மருது சகோதரர்களின் சிலைக்கு மரியாதை செய்கின்றனர்.
தேவர் குருபூஜை தங்க கவசம்.. தனி டீம் இறக்கிய எடப்பாடி! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! கவனிக்கும் ஓபிஎஸ்

சுதந்திர போராட்டம்
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளான மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய வீரர்கள். ஆங்கிலேயர்களை எதிர்க்க தேசிய அளவில் அணி உருவாக்கியபோது இவர்களை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆங்கிலேயர்கள் ஆளாகினர். மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள் 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் இதனை முறியடித்தனர்.

குருபூஜை
பின்னர் 1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி சிவகங்கையின் திருப்பத்தூரில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாக காளையார் கோயில் கட்டப்பட்டது. பின்னர் ஆண்டுதோறும் அக்.27ம் தேதி மருது பாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்த அரசியல் தலைவர்கள் பலர் வர உள்ளதால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு
அரசு சார்பில் இந்த குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்நிகழ்வில் கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் என 6 அமைச்சர்கள் பங்கேற்று மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதேபோல பாதுகாப்பு அம்சங்களை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். குருபூஜையையொட்டி காளையார் கோவிலுக்கு வரும் கார்கள் கண்காணிக்கப்படும் என்றும், கொண்டாட்டம் என்கிற பெயரில் கார்கள் மீதேறி பயணிப்பது, தொங்கிக்கொண்டு பயணிப்பது என விதி மீறல்களில் ஈடுபட்டால் கார் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நடவடிக்கை
இது தோடர்பாக பேட்டியளித்த மதுரை எஸ்பி சிவபிரசாத், கடந்த 11ம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று விதி மீறல்களில் ஈடுபட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 31 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 25 நான்கு சக்கர வானங்கள் மற்றும் 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல மருது பாண்டியர் குருபூஜை விழாவிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.

144 தடை
இது ஒருபுறம் இருக்க சிவகங்கை, தேவக்கோட்டை, காளையார்கோவில், திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை என 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.