கீழடி .. 'அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம்'.. தங்கம் தென்னரசு ட்வீட் !
சிவகங்கை: சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பார்ந்து நெகிழ்ந்து போன அமைச்சர் தங்கம் தென்னரசு, அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம் கீழடி என்று நெகிழ்ந்துள்ளார்.
தமிழர்கள் தான் உலகின் மூத்த குடி என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு அரிய பொக்கிஷங்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தமிழக அரசு அங்கு அகழ்வாராய்ச்சியை துரிதப்படுத்தி வருகிறது. உலகமே வியக்கும் வகையில் தமிழினத்தின் வரலாற்று சுவடுகள் அங்கு கிடைத்து வருகிறது.

தொல்லியல் ஆய்வு
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்.13ம் தேதி முதல் தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் ஆய்வாளர்கள் சுரேஷ், ரமேஷ், அஜய், காவ்யா தலைமையில் நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட 4 தளங்களில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல் உழவு கருவி
கீழடியில் 7 குழிகளில் மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை, கல் உழவு கருவி, பானை ஓடுகள், சிறிய பானை, சுடுமண் கிண்ணங்கள், கட்டிட சிதறல்கள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொருட்கள் கிடைத்த குழிகள், ஆழம், அகலம், உயரம், திசை மற்றும் பொருட்களின் எடை, அகலம், உயரம் உள்ளிட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

முதுமக்கள் தாழிகள்
கடந்த ஜூலை 4ம் தேதி கீழடி அருகே கொந்தகையில் ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள்; இதுவரை 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. பண்டைய தமிழர்கள் புதைக்கப்படும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து வைத்து புதைத்துள்ளனர். அதன் பொருட்களும் கிடைத்திருந்தது. ஒரே இடத்தில் வெவ்வேறு மாதிரி பழக்கங்கள் இருந்ததையும் உணர முடிகிறது. எனினும் இங்கு கிடைக்கப்படும் எலும்புகளை பிரத்யேக ஆய்வுக் கூடங்களில் முழுமையான ஆய்வு செய்யும்போதுதான் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் அப்போது தெரிவித்தனர்.

தென்னரசு மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் இன்று நடந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொட்டியின் வெளிப்புறத்தில் 2 இடங்களில் வட்ட வடிவிலான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை பார்த்து நெகிழ்ந்து போன அமைச்சர் தங்கம் தென்னரசு, சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அள்ள அள்ளக் குறையாத தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம் கீழடி என்று நெகிழ்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications