திமுக அரசு போவது சரியான பாதை.. ஒரே நாளில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது: ப.சிதம்பரம்
சிவகங்கை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒரு தப்பான அடிகூட வைக்காமல் தடம் புரளாமல் செயல்பட்டு வருவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் இருந்த திமுக கூட்டணி, இப்போதும் தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ''கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், தேர்தலைத் தட்டி கழிக்கின்றனர். ஓடி ஒளிந்திருக்கின்றனர். அதிமுக அரசு இந்த தேர்தலை நடத்தியிருக்கவேண்டும்.

தேர்தல் நடந்தவேண்டும் என அரசியல் சாசனம் சொல்கிறது, அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால் சட்டத்தை மதிக்கிறேன் என வாய் கிழிய பேசிய அதிமுக கட்சி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் தேர்தலை நடத்தாதது ஏன். மத்தியிலும், மாநிலத்துலும் மட்டுமே மக்களாட்சி இருந்தால் போதாது. எல்லா இடத்திலும் மக்களாட்சி இருக்கவேண்டும். மத்திய அரசு ஒருபோதும் மாநில அரசின் விவகாரங்களில் மூக்கை நுழைக்க கூடாது. நம்முடைய அரசு, மக்கள் பணத்தில் மருத்துவக்கல்லூரியை கட்டிவிட்டு,படிக்கும் மாணவர்களை நீட் தேர்வை எழுத வைக்கிறது.
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சுமத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதெப்படி ஒரே நாளில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும். 5 ஆண்டுகளுக்குள் தி.மு.க. அளித்த எல்லலா வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.
முதல்வர் ஸ்டாலின் இதுவரையிலும் ஒரு தப்பான அடிகூட எடுத்துவைக்கவில்லை என்றும் தடம் புரளாமல் திமுக அரசு நடைபெற்றுவருகிறது.என்றும் அது தடம் புரளாமல் தொடர்ந்து நடக்க வேண்டும்'' என்று ப.சிதம்பரம் பேசினார்.












Click it and Unblock the Notifications