இந்து மதத்தில் ஹெச்.ராஜாவுக்கு இருக்கும் உரிமை.. எனக்கும் உள்ளது.. அமைச்சர் பெரியகருப்பன் சுளீர்!
சிவகங்கை: இந்து மதத்தில் ஹெச்.ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தனக்கும் உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தன்னிடம் ஹெச்.ராஜா தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதாக நினைத்து அவர் இந்த பதிலை கூறியிருக்கிறார்.
நாங்கள் ஆ.ராசாவை பற்றி கேட்டோம் என மீண்டும் செய்தியாளர்கள் அவருக்கு நினைவூட்ட, ஓ அப்படியா.. நான் ஹெச்.ராஜாவை பற்றி கூறினேன் என கூலாக கூறிவிட்டு புறப்பட்டார்.

ஆ.ராசா சர்ச்சை
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அண்மையில் தெரிவித்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பாஜகவினரும், வலதுசாரி அமைப்பினரும் ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு அவர் மீது ஸ்டாலின் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் எங்கு சென்றாலும் அவர்களிடத்தில் ஆ.ராசா தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் முன் வைத்து வருகின்றனர்.

அமைச்சர் சேகர்பாபு
அந்த வகையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஆ.ராசா பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், தனக்கு காதில் விழவில்லை என சைகை செய்துவிட்டு புறப்பட்டார் அவர். இதுவும் சேர்ந்து சர்ச்சையானது. இதேபோல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடமும் ஆ.ராசா பற்றி கேள்வி கேட்கப்பட்டதால் அவர் டென்ஷன் ஆனதோடு கடுகடுக்கவும் செய்தார்.

அமைச்சர் பெரியகருப்பன்
இந்த வரிசையில் சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பெரியகருப்பனிடம், இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது பற்றி செய்தியாளர் ஒருவர் வினவினார். இந்து மதத்தில் ஹெச்.ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தனக்கும் உள்ளதாக சிறிதும் யோசிக்காமல் பதில் கொடுத்தார் அமைச்சர் பெரியகருப்பன். ஆ.ராசாவை பற்றி கேட்டதாக செய்தியாளர் அவருக்கு மீண்டும் நினைவூட்டிய நிலையில், ஓ அப்படியா.. நான் ஹெச்.ராஜாவை பற்றி கூறினேன் என கூலாக கூறிவிட்டு புறப்பட்டார்.

சாதுர்யம்
இதனிடையே ஆ.ராசா விவகாரத்தை அமைச்சர் பெரியகருப்பன் சாதுர்யமாக எதிர்கொண்டது கவனிக்கத்தக்கது. அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றிருந்தால் அது விவாதப் பொருளாக மாறியிருக்கும். ஆனால் அது போல் செய்யாமல் செய்தியாளரையே கன்பியூஸ் செய்யும் வகையில் அவர் ஒன்று கேட்டதற்கு இவர் ஒரு பதிலை அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications