'பிரேக் அப்' சொன்ன கல்லூரி மாணவி.. அடித்துக் கொன்ற 'கொத்தனார்' காதலன்! காரைக்குடியில் பயங்கரம்
சிவகங்கை: காதலுக்கு'பிரேக் அப்' சொன்ன கல்லூரி மாணவியை கொத்தனார் வேலை செய்யும் அவரது காதலன் 'சென்ட்ரிங்' கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா (18), அங்குள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதனிடையே, இவருக்கும், புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (24) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கண்ணன் கொத்தனராக வேலை செய்து வருகிறார். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பதிவுத் திருமணம்...
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் அரசல்புரசலாக தெரியவந்திருக்கிறது. இதில் சினேகாவின் வீட்டில், கண்ணனை காதலிப்பதற்கு லேசாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை கண்ணனிடம் சினேகா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அவர்கள் பதிவு திருமணம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துவிட்டனர். இருந்தபோதிலும், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்வது சினேகாவுக்கு வருத்தம் அளித்துள்ளது.

பெண் கேட்க வந்த கண்ணன்..
இதனிடையே, பதிவு திருமணம் செய்வதற்கு முன்பாக, கடைசியாக ஒரு முறை எங்கள் வீட்டில் கேட்டுப் பார்க்கலாம் என காதலனன் கண்ணனிடம் சினேகா கூறியுள்ளார். "எவ்வளவு கூறினாலும் என்னை மாப்பிள்ளையாக ஏற்க உங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள்" என கண்ணன் கூறியிருக்கிறார். ஆனால் சினேகா தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில் கண்ணனும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதன்பேரில், கண்ணன் தன் தாயார் மற்றும் உறவினர்களுடன் கடந்த மாதம் சினேகாவின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார்.

தகராறு - போலீஸ் எச்சரிக்கை
அப்போது சினேகாவின் பெற்றோர் கண்ணன் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சினேகாவின் தாத்தாவை கண்ணன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சினேகாவின் உறவினர்கள், கண்ணனையும், அவரது உறவினர்களையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். மேலும், கண்ணன் மீது போலீஸிலும் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் கண்ணனை அழைத்து எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

காதலுக்கு 'பிரேக் அப்'
இந்த சூழலில், தன் வீட்டில் வந்து தகராறு செய்ததுடன், தனது தாத்தாவையும் தாக்கியதால் கண்ணனுடன் பேசுவதை சினேகா நிறுத்தியுள்ளார். கண்ணன் பல முறை எடுத்துக் கூறியும் சினேகா இறங்கி வரவில்லை. மேலும், நமது காதலையும் 'பிரேக் அப்' செய்து விடலாம் என சினேகா கூறியிருக்கிறார். அன்றுடன், கண்ணனின் செல்போன் அழைப்புகளையும் சினேகா ஏற்கவில்லை. இதனால் கண்ணன் கடும் ஆத்திரம் அடைந்தார்.

கடைசியாக ஒரு முறை...
இந்நிலையில், நேற்று சினேகாவை செல்போனில் தொடர்புகொண்ட கண்ணன், கடைசியாக ஒரு முறை நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, கண்ணன் கூறிய இடத்துக்கு சினேகா சென்றுள்ளார். அப்போது, தன்னையும், தனது தாயாரையும் உங்கள் குடும்பத்தினர் தரக்குறைவாக பேசியதால்தான் அன்று பிரச்சினை ஏற்பட்டது. இனி அப்படி நடக்காது என கண்ணன் கூறியுள்ளார். மேலும், பதிவு திருமணம் செய்து கொள்ளவும் கண்ணன் அழைத்துள்ளார். இதற்கு சினேகா சம்மதிக்கவில்லை.

இரும்புக் கம்பியால் தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், தான் மறைத்து வைத்திருந்த சென்ட்ரிங் கம்பியை எடுத்து சினேகாவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சினேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து பயந்து போன கண்ணன் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை போலீஸார், அங்கு வந்து சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்து தப்பியோடி கொத்தனார் கண்ணனையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications