ரோஹித் சர்மாவை தூக்குங்க.. சுப்மன் கில் - ஜெய்ஸ்வாலுடன் இந்திய அணி விளையாடலாம்.. டென்ஷனான ரசிகர்கள்!
நாக்பூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய ரோஹித் சர்மா, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக பிசிசிஐ தரப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சில அழுத்தங்கள் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வை அறிவிக்குமாறு பிசிசிஐ நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

2027ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயாராகுவதற்கான அவகாசத்தை அடுத்த கேப்டனுக்கு அளிக்க வேண்டும் என்பதால், சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வை அறிவிக்க ரோஹித் சர்மாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ரன்கள் சேர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ரோஹித் சர்மா வெளியேறி இருக்கிறார். இந்தப் போட்டியில் அறிமுக வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கம் கொடுத்தார். அவர் 22 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவரால் எளிதாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட முடியும்.
அதேபோல் நட்சத்திர வீரரான சுப்மன் கில் 2023ஆம் ஆண்டில் இருந்து இந்திய ஒருநாள் அணிக்காக அதிக ரன்களை விளாசி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரின் பேட்டிங் சராசரி மட்டும் 58க்கும் அதிகமாக இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இடது - வலது காம்பினேஷனில் களமிறங்க திட்டமிட்டு வருகிறது.
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடது - வலது காம்பினேஷனுடன் செல்வதற்கே அதிகமாக விரும்புவார். எப்படி டி20 அணியில் ஒரு இடது கை பேட்ஸ்மேன், ஒரு வலதுகை பேட்ஸ்மேன்கள் என்று பேட்டிங் வரிசையை உருவாக்கியுள்ளாரோ, அப்படியே ஒருநாள் அணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். இதன் காரணமாகவே யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலேயே விளையாடியுள்ளார்.
அடுத்த 2 போட்டிகளில் ஜெய்ஸ்வால் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தும் பட்சத்தில், துபாயில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தான். இன்னொரு இடத்தில் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மோசமான நிலையில் இருப்பதால், அவரின் ரசிகர்களே ஓய்வு பெற வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்திய அணி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணியுடன் களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அவர்களுடன் விராட் கோலி இணையும் பட்சத்தில், இந்திய அணியின் பேட்டிங் வரிசை அதிக வலிமை பெறும். அதேபோல் டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால் இல்லையென்றால், இந்திய அணியில் அக்சர் படேல், ஜடேஜா மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications