அன்று நேரு எடுத்த ஒரு முடிவு.. கிரிக்கெட் உலகில் இந்தியா தலைநிமிர காரணமே அதுதான்.. என்ன தெரியுமா
டெல்லி: இன்று இந்தியா கிரிக்கெட் உலகில் சூப்பர் பவராக இருந்தாலும் கூட ஒரு காலத்தில் இந்தியா தனது ஐசிசி உறுப்பினர் பதவியை இழக்கும் சூழல் இருந்தது. அப்போது நேரு எடுத்த முடிவு தான் இந்தியாவின் ஐசிசி உறுப்பினர் பதவியைக் காப்பாற்றியது.
இன்றைய தினம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது. இந்தப் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.

இந்த இறுதிப் போட்டி ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் நேரு எடுத்த ஒரு முடிவுதான் சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பில் இந்தியா தனது பதவியை இழக்காமல் இருக்கப் பார்த்துக் கொண்டது உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நேரு: 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பில் இந்தியா தனது உறுப்பினர் பதவியை இழக்கும் சூழல் உருவானது. அப்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் எடுத்த ஒரு அரசியல் முடிவு தான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியா தொடர்ந்து இருப்பதை உறுதி செய்தது.
பிரிட்டிஷ் காமன்வெல்த் அமைப்பில் இந்தியா தொடரும் என்று நேரு எடுத்த முடிவுக்கு அவரது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது.. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் பிரிட்டிஷ் உடன் இருக்கும் அனைத்து தொடர்புகளையும் இந்தியா விட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். பலரது எதிர்ப்பையும் தாண்டி நேரு அந்த முடிவை எடுத்தார். நேரு அன்று எடுத்த அந்த அரசியல் முடிவு தான் இந்தியா இன்று கிரிக்கெட் உலகில் தவிர்க்கவே முடியாத சக்தியாக மாற காரணமாக இருந்தது.
கிரிக்கெட் காதல்: பொதுவாக நேருவுக்கு எப்போதுமே கிரிக்கெட் மீது தனி காதல் இருந்தே வந்துள்ளது. ஏனென்றால் நேரு பிரிட்டனில் உள்ள ஹாரோ பள்ளியில்தான் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அங்கே அவர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டிருக்கிறார். அன்று தொடங்கிய நேருவின் கிரிக்கெட் ஆர்வம் அவர் பிரதமரான பிறகும் கூட தொடர்ந்தது.
கடந்த 1953இல் பீகார், ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி திரட்டும் போட்டி நடைபெற்றது. பிரதமர் லெவன் மற்றும் துணை குடியரசுத் தலைவர் லெவன் அணிகளுக்கு இடையே இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியில் நேரு விளையாடினார். அந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. இருப்பினும், ஜவஹர்லால் நேருவின் ஆட்டம் ஒரு கிரிக்கெட் வீரரை போலவே இருந்ததாக அப்போது வெளியான பிபிசி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இருந்த சிக்கல்: இப்படி நேருவுக்கு கிரிக்கெட் மீது இருந்த காதலே இந்தியாவுக்கும் உதவி இருக்கிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட போதிலும், இந்தியா தனது அரசியலமைப்பை ஏற்கும் வரை பிரிட்டிஷ் மன்னரை இந்தியாவின் அரசராக ஏற்றுக்கொண்டது. 1950இல் இந்திய அரசியலமைப்பு கொண்டு வரப்பட்ட நிலையில், அப்போது இந்தியா பிரிட்டிஷ் மன்னராட்சியுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினர்.
அதேநேரம் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கிளெமென்ட் அட்லி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இந்தியா காமன்வெல்த்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
காமன்வெல்த்: பிரிட்டிஷ் காமன்வெல்த் என்பது 54 உறுப்பு நாடுகளைக் கொண்ட அமைப்பாகும். இதில் உறுப்பினர்களாக இருந்த நாடுகள் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் இருந்த நாடுகள் ஆகும். பொதுவாக இந்த காமன்வெல்த் அமைப்பின் தலைவராகப் பிரிட்டன் மன்னர் இருப்பார். அதாவது பிரிட்டிஷ் மன்னராட்சியுடன் வரலாற்றுத் தொடர்புகள் இருக்கும் நாடுகள் தான் காமன்வெல்த்தில் இருக்கும். அதேநேரம் அவர்களுக்கும் பிரிட்டன் அரசுக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்காது.
அப்போது 1948இல், அப்போதைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான இம்பீரியல் கிரிக்கெட் மாநாடு லார்ட்ஸில் கூடியது. அப்போது இந்தியாவை ஐசிசியில் தற்காலிக அடிப்படையில் உறுப்பினராக வைத்திருக்கச் சம்மதித்தனர். ஏனென்றால் அப்போது இருந்த ஐசிசி விதி 5இன் படி பிரிட்டனின் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடுகள் ஐசிசியில் உறுப்பினராக இருக்க முடியாது என்ற விதி இருந்தது.
எனவே, காங்கிரஸ் தலைவர்கள் அழுத்தம் காரணமாக இந்தியா காமன்வெல்த்தில் இருந்து விலகும் முடிவை நேரு எடுத்திருந்தால் இந்தியா ஐசிசி உறுப்பினர் பதவியை இழந்திருக்கும். அது இந்திய கிரிக்கெட் எதிர்காலத்தையே வேறு மாதிரி மாற்றியிருக்கும். அந்த நேரத்தில் நேரு எடுத்த முடிவு தான் இன்று கிரிக்கெட் உலகில் இந்தியாவைத் தவிர்க்கவே முடியாத இடத்தில் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications