இனி தோனியாலும் முடியாது.. பேட்ஸ்மேன்களை சுமக்கப் போகும் பவுலர்கள்.. 11ம் ஜோக்கரா இருந்தா எப்படி பாஸ்
சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை கொல்கத்தா மைதானத்தில் தொடங்கவுள்ளது. வழக்கமாக ஐபிஎல் தொடர் நெருங்கும் போது சிஎஸ்கே அணி ரசிகர்கள் உற்சாகமாக இருப்பார்கள். ஆனால் இம்முறை சிஎஸ்கே அணி ரசிகர்கள் பதற்றத்துடன் காணப்படுகிறார்கள். அதற்கு சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி கட்டமைக்க போகிறார்கள் என்ற பதற்றம்தான்.
ஏனென்றால் சிஎஸ்கே அணியின் பவுலிங் வரிசை மிகச்சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பேக் அப் பவுலர்களும் தரமாக வாங்கப்பட்டிருக்கிறார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக பவுலிங் செய்யக் கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் நூர் அஹ்மத் ஆகிய மூவரையும் வைத்து சிஎஸ்கே அணி எதிரணியை மொத்தமாக முடித்துவிடும்.

அதேபோல் இவர்களில் யார் காயமடைந்தாலும் அவர்களின் இடத்தில் ஸ்ரேயாஸ் கோபால் விளையாட வைக்கப்படுவார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக பதிரானா, சாம் கரண், நேதன் எல்லீஸ், அன்சுல் கம்போஜ், கலீல் அஹ்மத், குர்ஜப்னீத் சிங் என்று தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.
இதனால் சிஎஸ்கே அணிக்கு பவுலிங்கை பொறுத்தவரை துளியளவும் பிரச்சனை கிடையாது. ஆனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது. ஏனென்றால் சிவம் துபே, ரச்சின் ரவீந்திராவை தவிர்த்து அனைவரும் நிதானமாக தொடங்கி அதிரடிக்கு திரும்பக் கூடிய வீரர்களாக இருக்கின்றனர்.
ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ராகுல் திரிப்பாட்டி ஆகிய மூவரும் ஒரே மாதிரியான பேட்ஸ்மேன்கள்தான். அதேபோல் நம்பர் 4ல் வரக்கூடிய தீபக் ஹூடா, பின்னர் வரும் சாம் கரண், ஜடேஜா, தோனி ஆகியோரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்க முடியாது. இதனால் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்களை சேர்த்து பவுலர்கள் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் டெவான் கான்வே, ராகுல் திரிப்பாட்டி மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சிறந்த ஃபார்மில் இல்லை. திரிப்பாட்டி மற்றும் ஹூடா இருவருமே ஐபிஎல் தொடரில் ரன்கள் சேர்த்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. லக்னோ அணியில் ஹூடாவுக்கு வாய்ப்பு கொடுத்து அந்த அணி மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தை சந்தித்ததே மிச்சம்.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் முதல் 2 போட்டிகளுக்குள் சரியாக செட்டாகவில்லை என்றால், இந்த சீசனிலும் தோல்வியை சந்திக்க வாய்ப்புகள் அதிகம். சிஎஸ்கே அணி வரலாற்றில் தொடர்ச்சியாக 2 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்ததில்லை. கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் சிக்கல்களை சந்தித்திருந்தாலும், இந்த சீசனில் சொதப்பினால் அவருக்கும் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications