நீதான்யா தரமான கோச்.. ஒரு வெளிநாட்டு வீரர் கூட மிஸ் ஆகலையே.. ரிக்கி பாண்டிங் செய்த சம்பவம்!
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மிகச்சிறந்த பயிற்சியாளர் என்று பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியிலும் வீரர்களை கையாள்வதில் ரிக்கி பாண்டிங் திறமைசாலியாக இருக்கிறார். இதனால் இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு மிகமுக்கியமான மாற்றம் நடந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 11 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் அணி முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ளது. இதுவரை பஞ்சாப் அணி விளையாடிய 11 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரேயொரு போட்டியில் வென்றாலே, பஞ்சாப் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும்.

இந்த சூழலில் ஐபிஎல் தொடர் பாதியுடன் நிறுத்தப்பட்டதால், வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக நாடு திரும்பினர். தற்போது நாளை மறுநாள் முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கவிருப்பதால், வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ஒவ்வொரு அணியிலும் உள்ளது. ஆனால் பஞ்சாப் அணிக்கு மட்டும் அந்த பிரச்சனையே இல்லை.
ஏனென்றால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தின் போது, பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சொந்த ஊர் திரும்பாமல் இந்தியாவிலேயே முகாமிட்டிருந்தார். அதேபோல் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஜோஷ் இங்லிஸ் ஆகியோரை தவிர்த்து வேறு யாரும் சொந்த ஊருக்கு செல்லவில்லை. மார்கோ யான்சனை கூட துபாயிலேயே பஞ்சாப் அணி நிர்வாகம் முகாமிட வைத்திருந்தது.
மற்ற அனைத்து வீரர்களுடனும் ரிக்கி பாண்டிங் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை இந்தியாவிலேயே தங்க வைத்திருந்தார். இதனால் திட்டமிட்டபடி மே 26ஆம் தேதி வரை எந்த வெளிநாட்டு வீரர்களும் சொந்த ஊர் திரும்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏற்கனவே மார்கோ யான்சன் பஞ்சாப் அணிக்கு திரும்பிவிட்ட நிலையில், ஸ்டாய்னிஸ் மற்றும் இங்லிஸ் ஆகியோரும் விரைவில் வரவுள்ளனர்.
இதனால் தனது வீரர்களுடன் களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியிலும் ரிக்கி பாண்டிங் சிறந்த உறவை வைத்திருக்கிறார். இதன் மூலமாகவே போர் பதற்றத்தின் போதும் ரிக்கி பாண்டிங்கால் வீரர்களை நம்பிக்கை வைத்து தங்க வைக்க முடிந்துள்ளது. ரிக்கி பாண்டிங்கின் இந்த அணுகுமுறை பஞ்சாப் அணி நிர்வாகத்தையும் அதிகமாக ஈர்த்துள்ளது.
அதேபோல் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடர் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட உடன், முதல் ஆளாக பயிற்சிக்கு திரும்பி இருக்கிறார். பிளே ஆஃப் போட்டிகளின் போது சில ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் விலக வாய்ப்பு இருந்தாலும், அவர்களின் இடத்தை பஞ்சாப் அணி நிர்வாகம் எளிதாக ஈடு செய்யும் என்றும் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த சீசனில் பஞ்சாப் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications