அப்படியே தோனி மாதிரி.. 25 ரன்னுக்கு 5 விக்கெட் காலி.. ஒற்றை ஆளாக நின்று 134 ரன்களை குவித்த ருதுராஜ்!
ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே தொடரில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணி 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒற்றை ஆளாக நின்று 131 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 134 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் தோனியின் ஸ்டைலில் இருப்பதாக கொண்டாடி வருகின்றனர்.
அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டிருந்தார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆடிய 2வது ஒருநாள் போட்டியில் அசத்தலாக சதம் விளாசிய போதும், ஸ்ரேயாஸ் ஐயரின் கம்பேக் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட்டை பிசிசிஐ கழற்றிவிட்டது. இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் கொஞ்சம் கூட கவலையின்றி மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்களை குவித்து பிசிசிஐ கதவுகளை உடைக்க தொடங்கி இருக்கிறார். விஜய் ஹசாரே தொடரில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது.
2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகாளை இழந்து மகாராஷ்டிரா அணி தடுமாற, நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் களம் புகுந்தார். ஆனாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். இதனால் மகாராஷ்டிரா அணி 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 100 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என்று பலரும் கணக்கிட்டனர். ஆனால் களத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தனது திறமையை வெளிப்படுத்த தொடங்கினார்.
84 பந்துகளில் அரைசதத்தை கடந்த ருதுராஜ் கெய்க்வாட், பின்னர் ரன் குவிப்பை வேகப்படுத்தினார். இதையடுத்து விரைவாக 124 பந்துகளில் சதத்தை எட்டினார். கடைசி ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 6, 2, 6, 6, 6, 1 என்று 27 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் மகாராஷ்டிரா அணியின் ஸ்கோர் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களாக உயர்ந்தது.
சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 134 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.இதன் மூலமாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் சராசரி 58.83ஆக அதிகரித்துள்ளது. அதாவது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார்.
அதேபோல் 95 லிஸ்ட் ஏ போட்டிகளிலேயே 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனையை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கில் பெவனின் சராசரியே 57.86ஆக இருந்தது. அதனைவிடவும் ருதுராஜ் கெய்க்வாட் அதிகமாக வைத்திருக்கிறார். அதிலும் மிடில் ஆர்டரில் களமிறங்கி ருதுராஜ் கெய்க்வாட் ரன்களை குவித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications