மீண்டும் பற்றி எரியும் இலங்கை- அரசியல் ஆதாயத்துக்காக தூண்டிவிடுகிறார் மகிந்த ராஜபக்சே?

கொழும்பு : 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இலங்கையின் ஈழப்போர் முடிந்து சரியாக 9 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் மீண்டும் அங்கு இன மோதல் வெடித்துள்ளது. ஆனால் இந்த முறை சிங்களர்கள்- முஸ்லிம்கள் இடையே இன மோஒதல் உருவாகியுள்ளது.
இலங்கையில் பெரும்பான்மை வகிக்கும் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவு பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. ஈழப்போர் முடிக்கு வந்து அதிபர் மகிந்த ராஜபக்சே எழுச்சி பெற்றதால் இரண்டு மதத்தினருக்கும் இடையே சில இடங்களில் பிரச்னைகள் எழுந்தன. ஆனால் 2015ல் ராஜபக்சே ஆட்சி முடிவுக்கு வந்ததும் அது தனிந்து போனது என்று சொல்லலாம்.

தோல்வியில் முடிந்த முயற்சிகள்
புதிய அதிபர் மைத்ரிபால சிரிசேனா - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஜனநாயகத்தை மறுகட்டமைக்கவும், அமைதியான சூழலை ஏற்படுத்தவும் முயன்றனர். ஆனால் அவர்களின் 3 ஆண்டுகால முயற்சி தோல்வியடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

வன்முறை
கண்டியில் சிங்கள இளைஞர் ஒருவர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டதாக வெடித்த பிரச்னையால் இலங்கையில் சிங்களர்கள் - முஸ்லிம்கள் இடையே இன மோதல் வெடித்துள்ளது. இந்த கொலை சம்பவத்தால் கண்டி - பல்லேகலை பகுதியில் வன்முறை மூண்டுள்ளது. நிலைமை கைமீறிப்போவதால் 10 நாட்களுக்கு அவசர நிலைபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு படைகள் அணிவகுப்பு
சாலையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தை வைத்து சிலர் வன்முறையை பரப்புவதாக இலங்கையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார். நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதால் அரசு உடனடியாக செயலில் இறங்கி ராணுவம் மற்றும் சிறப்பு படைகளை கண்டி பகுதிக்கு அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ராஜபக்சேவின் அரசியல் விளையாட்டா?
மற்றொருபுறம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கண்ட ராஜபக்சேவின் கட்சியினர் இது போன்ற தீவிரவாத செயல்களைத் தூண்டுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதிபர் சிறிசேனா - ரணில் விக்ரமசிங்கே கூட்டணி மீதான மக்களின் நம்பகத்தன்மையை உடைப்பதன் மூலம் 2020ல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் விதமாக ராஜபக்சே இந்த அரசியல் சதுரங்கத்தை ஆடுகிறார் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள். ராஜபக்சே ஆதரவாளர்கள் தீவிரவாத சிந்தனைகள் கொண்டவர்கள் என்றும் இதுபோன்றதொரு சூழலுக்காகத் தான் அவர்கள் காத்திருந்ததாகவும் கூறுகின்றனர்.