அடுத்தடுத்து அதிகாரிகள் 'முற்றுகை'.... அமெரிக்காவின் அடிமைநாடாக இலங்கை உருவெடுப்பதாக குற்றச்சாட்டு
கொழும்பு: இலங்கையின் அதிபர் சிறிசேன தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர் அந்நாட்டுக்கு அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வருகை தந்து கொண்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அதிகாரி அமி சீரைட் கொழும்பில் முகாமிட்டுள்ளார்.
இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது. புதிய அதிபராக சிறிசேனவும் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன்பின்னர் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு அடியோடு மாறிப்போனது. அமெரிக்காவின் நிஷா பிஸ்வால், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ராம் மாலினோவ்ஸ்கி, சமந்தா பவர், சானென் என பலரும் இலங்கையில் அடுத்தடுத்து முகாமிட்டனர்.
ஐ.நா. சபையிலும் இதுவரை இலங்கைக்கு எதிரான நிலையை கடைபிடித்து வந்த அமெரிக்கா பல்டி அடித்து அந்நாட்டை காப்பாற்றுகிற பகீரத முயற்சியில் குதித்து வென்றது. தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான உதவி செயலர் அமி சீரைட் இலங்கையில் முகாமிட்டுள்ளார்

அதிபர் ஒபாமாவைத் தவிர அடுத்தடுத்து அமெரிக்கா அதிகாரிகள் இலங்கைக்கு சென்று வருவது அந்நாட்டு சிங்கள கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை படிப்படியாக அமெரிக்காவின் அடிமை நாடாக உருவாகி வருவதாக மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர்.

இலங்கையின் இயற்கை வளத்தை அபகரிக்கவும் இலங்கையை பயன்படுத்தி ஆசிய பிராந்தியத்தில் வலுவாக காலூன்றவும் அமெரிக்கா முயற்சிக்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.












Click it and Unblock the Notifications