கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள்!
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் மீட்டு அமைதிப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கரூர் அருகே உள்ள நெரூர் வடபாகம், ஒத்தக்கடையை சார்ந்தவர் லட்சுமி (60), இவர் கடந்த 35 வருடங்களாக ஒத்தக்கடையில் வசித்து வருகிறார். அவர் வசித்து வரும் இடம் அரசு புறம்போக்கு இடம் என்பதால் நெரூர் வடபாகம் ஊராட்சி மன்ற தலைவரும், கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவரின் கணவருமான அ.தி.மு.க பிரமுகரான மணிவண்ணன் தனக்கு வேண்டுமென்று அவர்களை ஏற்கனவே காலி செய்ய சொல்லியுள்ளார்.

மேலும் லட்சுமி வசிக்கும் குடிசைக்கு தீ வைத்ததோடு மிரட்டியும் உள்ளார். இது சம்பந்தமாக வாங்கல் காவல் நிலையத்தில் லட்சுமி குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். ஆனால் இந்த புகாருக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், லெட்சுமி மனமுடைந்து மிகுந்த வேதனையுடன் இன்று காலை நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு வந்தார்.

அவரும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 2 பெண்களும், தங்கள் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் வளாகமே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications