
எந்த 500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா?: 16ம் தேதி சட்டசபையில் அறிவிக்கும் ஜெ.
சென்னை: தமிழகத்தில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் எவையெவை என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா வரும் 16ம் தேதி சட்டசபையில் அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். அதன்படி அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடும் ஆவணத்தில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

மேலும் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை 2 மணிநேரம் குறைத்து அவர் உத்தரவிட்டார். இந்நிலையில் மூடப்படும் 500 கடைகளின் பட்டியலை டாஸ்மாக் மண்டல மற்றும் மாவட்ட செயலாளர்கள் தயாரித்தனர். இந்த பட்டியல் மாவட்ட கலெக்டர்களிடம் கடந்த வாரம் அளிக்கப்பட்டது.
மூடப்படும் கடைகளின் பட்டியல் டாஸ்மாக் தலைமையகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. 1,000 கடைகள் அடங்கிய பட்டியலில் இருந்து 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன.
எந்தெந்த கடைகள் மூடப்படுகிறது என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா வரும் 16ம் தேதி நடக்கும் சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பார் என டாஸ்மாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.