ஓட்டை பிரித்து பாஜகவுக்கு உதவ பிளானாம்! அதிமுக வேட்பாளர்கள் “டம்மி”.. ஸ்டாலின் சொல்வதை பாருங்க!
சென்னை: எடப்பாடி பழனிசாமியால் களமிறக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள், மறைமுக பாஜக வேட்பாளர்கள் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 25) மாலை கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், திருநெல்வேலி லோக்சபா தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பெர்ட் ஆகிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

ஸ்டாலின் பேச்சு: தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசியதோடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் சரமாரியாக வெளுத்தார். ஸ்டாலின் பேசுகையில், "ஒரே மதம்! ஒரே மொழி! ஒரே உணவு! ஒரே பண்பாடு! ஒரே தேர்வு! ஒரே தேர்தல்! ஒரே வரி! என்று ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. இந்தப் பல்லவியை அனுமதித்தால், ஒரே ஒரு மனிதர் மன்னராக இருக்கும் ஆட்சியாக இந்தியா மாற்றப்பட்டு விடும்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவற்றைப் பாதுகாக்கும் நமது அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார்கள். நாடு இப்படிப்பட்ட பேராபத்தில் சிக்கியிருக்கிறது... ஆனால் இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல்... எந்தக் கொள்கையும் இல்லாமல்... வளைந்த முதுகுடன் வலம் வருகிறார் பழனிசாமி! பாதம்தாங்கி பழனிசாமி.
கள்ளக் கூட்டணி: நடப்பது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சியிலிருந்து, நாட்டைப் படுகுழியில் தள்ளியுள்ள பிரதமர் மோடி பற்றியோ, பா.ஜ.க பற்றியோ ஏதாவது கண்டித்துப் பேசத் தெம்பு இருக்கிறதா? பழனிசாமி அவர்களே...
உங்களின் கள்ளக் கூட்டணி கபட நாடகத்தில் கூட பா.ஜ.கவை எதிர்ப்பதற்கான துணிவு இல்லையா? கேள்விக் குறிபோல் வளைந்தே இருப்பது, அவமானத்தின் அடையாளம் இல்லையா? பா.ஜ.கவிற்கு எதிரான வாக்குகளை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று களமிறக்கப்பட்டிருக்கும் மறைமுக பா.ஜ.க வேட்பாளர்கள்தான், பழனிசாமியால் களமிறக்கப்பட்டுள்ள அ.தி.மு.க வேட்பாளர்கள்.
பாஜகவுக்கு டப்பிங்: எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழ்நாட்டு மக்களிடம் மட்டுமல்ல, அ.தி.மு.க தொண்டர்களிடமும் செல்வாக்கை இழந்துவிட்டார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்த கட்சி எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தி.மு.க. சார்பில் நாங்கள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தியபோது - "எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்?" - என்று பா.ஜ.கவிற்கு டப்பிங் பேசியவர்தான் பழனிசாமி. இப்போது பா.ஜ.கவின் கதை - திரைக்கதை - வசனம் - இயக்கத்தில் தனியாகப் போட்டி போடும் கபட நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
கண்ணை குத்தி: எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பேசினாரே... பா.ஜ.க.வை விமர்சித்து அவர் வாயில் இருந்து ஒரு வார்த்தையாவது வந்ததா? இதுதான் கள்ளக் கூட்டணி! பா.ஜ.கவை விமர்சிக்காமல், எதிர்க்காமல், தமிழ்நாட்டையே நாசப்படுத்த துணை போகும் பழனிசாமி, "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்" என்று சபதம் எடுக்கிறார். தன்னுடைய விரல்களால் தமிழ்நாட்டு மக்களின் கண்ணைக் குத்திய பழனிசாமி எடுப்பது சபதம் அல்ல; வெற்றுச் சவடால்!" என காட்டமாகப் பேசியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications