• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட்டக் கத்திக் கலைஞர்கள்...மொண்ணைக் கத்தி மக்கள்! - அலெக்ஸ் பால் மேனன்

By Shankar
Google Oneindia Tamil News

முன்குறிப்பு : நான் இன்னும் கத்தி திரைப்படத்தைப் பார்க்கவில்லை. பார்க்கும் எண்ணமுமில்லை. 97இல் கல்லூரியில் படிக்கும் பொழுதே விஜய் அஜித் படங்கள் பார்த்துப் புண்பட்டு எங்கள் குலதெய்வம் மூக்குப்பேறிச் சாமிக்கு படையல் போட்டு கட்டிக் கொண்ட கங்கணம் அது. ஆனாலும் தமிழகத் தொலை, சிறு தூரப் பேருந்துகளின் புண்ணியத்தில் இவர்களின் ஆகாவளித் திரைப்படங்களைப் பார்க்கும் கட்டாயத்திற்கு உட்பட்டு, தூக்கமும் வராமல் தொல்லை பெட்டிகளை அணைக்கவும் முடியாமல், கண்ணும் மனமும் ரணமாகியப் பயணங்கள் பல...

அவ்வழியில் கத்தி பற்றி ஊர் உலகம் பேசி எழுதி உசுப்பேற்றி, நண்பர் ஒருவர் வீட்டுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லப் போன இடத்தில், "நல்ல ப்ரிண்டுங்க , டவுன்லோடியாச்சு, பாத்திரலாம்" என வலுக் கட்டயாத்தின் பேரில் அரைமணி நேரக் காட்சிகளைக் கண்டு 'கழி'த்துக் கிழிந்து போய், பாதியில் வயிறு சரியில்லை என்று பொய் சொல்லித் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து வெறியோடு இவை அல்லாமல் ட்ரெய்லர், திரை விமர்சனம், கீச்சுக் கூச்சல்கள், முகநூல் பதிவுகள் , வலைப்பூப் பிளிறல்கள் எல்லாம் வாசித்து முடித்துவிட்டு இந்தப் பதிவைப் போடுகிறேன் .

முக்கியக் குறிப்பு : இந்தப் பதிவின் நோக்கம் "கத்தி"க் காற்றுள்ள போதே "தூற்றிக்" கொள்வதே (தமிழகராதி: தூற்றுதல் = சிதறுதல்; தூசு போகத் தானியங்களைத் தூவுதல்; புழுதிமுதலியவற்றை இறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல்; ) மேற்கூறிய இவற்றில் பழி கூறுதல் என இவ்விடம் பொருள் கொள்க... சுருக்கமாகத் துப்புதல் (அ) காறித் துப்புதல் எனப் பொருள் கொள்ளுதல் சாலத் தகும். என் இனமானத் தமிழனை எவ்வளவு தூற்றினாலும் தகும், என்பதே இப்பதிவின் அடிப்பொருள் /கருப்பொருள் எனக் கொள்க !

Alex Paul Menon's article on Water Management in Tamil Nadu

இப்போது பதிவிற்கு ;

எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது, ஏனெனில் அவர்கள் வியாபாரிகள், அவர்கள், மேம் போக்காய் சிலிர்க்க வைக்கவும், மேலோட்டமாய் அரிப்பெடுக்க வைக்கவும், அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள், அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும், ஆழ்ந்த சிந்தனையும், தெளிந்த படைப்புகளையும் எதிர்பார்ப்பது "சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட போய், கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி." அதனால் இந்தப் பதிவின் எள்ளல், துள்ளல், நகை, நட்டு , துப்பல், தூற்றல் எல்லாம் என் இனிய தமிழ் மக்களையே போய்ச் சேரும்!

முதலாவதாக சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களைப் பற்றிய புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? ஒரு விஷயத்தை பொத்தாம் பொதுவாகப் புரிந்து கொள்கிறோமா, அல்லது ஆழமாய், அகலமாய், புத்தகங்கள், இணையம் வாயிலாக வாசித்தறிகிறோமா? நம்மின் அறிவுக் குறைபாடுதானே நம் சார்ந்த சமூகத்துக்கும், அந்த சமூகம் பெற்றேடுத்திருக்கும் கலைத் தெய்வங்களுக்கும் இருக்கும் , அப்படியிருக்க சினிமாக்காரனைச் சாடுவதென்ன முறை? இப்படிச் சமூக விஷயங்களைப் பற்றி மேம்போக்கான ஆர்வமும் மேலோட்டமான புரிதலும் கொண்டதனால்தானடா ஒரு நாள் முதல்வர்களால் உங்கள் தமிழகத்தைத் திருத்த முடிகிறது, திருத்தி உங்கள் சில்லறைக் காசுகளைத் திருடி அவர்கள் கல்லா கட்ட முடிகிறது. ஒரே ஒரு ஹீரோ இல்லன்னா நாலு கோவக்கார இளைஞர்களால யாரையாவது உள்துறை மந்திரி அல்லது முதல் மந்திரியைக் கடத்தி அவர்களின் அறிவுக் கண்களை நாலு வசனத்தில் திறக்க முடிகிறது! மொத்தத்தில் உங்கள் பிரச்சினைகளுக்கான காரணம் நீங்கள் அல்ல, அதற்கான தீர்வும் உங்களிடம் இல்லை என்ற உங்கள் மொண்ணைப் புரிதலால் தானடா வீராணம் குழாய்க்குள்ளே உக்கார்ந்தா உங்க வீட்டுக் கிணத்துலயும், வயக்காட்டுலயும் தண்ணி வந்திரும்னு நம்புறீங்க, கை தட்டித் தட்டிக் காசுக்கு வசனம் பேசுற எல்லாத்தையும் தலைவனா, வாழ்க்கைய உய்விக்க வந்த பெருமானா நினைச்சு, இவரு அரசியலுக்கு வந்தா நல்லாருக்குமா , அவரு வந்தா நம்மளக் காப்பாத்திருவாரான்னு கண்ல ஏக்கத்தோட திரியறீங்க!

சமூகப் பொறுப்பும் நிஜ அக்கறையும், மாற்று அரசியல் பற்றிய அறிவும் , சமூக மாற்றம் கொணர வேண்டும் என்ற துடிப்பும் உள்ளவர்கள் சினிமாத் துறையிலிருந்தும், மற்ற எந்தத் துறையிலிருந்தும் வரலாம், வரவேண்டும். ஆனால் முதல் படம் நடித்த உடனே முதல்வர் நாற்காலியில் குத்த வைக்க வேண்டும் என்று விரும்பும் விடலைத்தனங்கள் அல்ல.

சரி முக்கியப் பிரச்சினைக்கு வருவோம்... தமிழகம் தண்ணீரின்றித் தவிக்கிறது, தமிழக விவசாயி தண்ணீர் இல்லாமல், விளை நிலங்களை விற்றுக் கட்டிடக் கூலியாய் பெரு நகரங்களின் பிளாட்பாரங்களில் படுத்துறங்கி அழுந்துகின்றான்.

யார் காரணம்? கார்ப்பரேட்களா, கொக்கா கோலாவா, பெப்சியா? அல்லது எல்லையே இல்லாமல் குடிக்க, கட்ட, விவசாயம் செய்ய, தண்ணீர் என்னும் வளத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் ஆழ்துளைக் கிணறுகளா.. நம் நதி, நீர் நிலைகளை மாசுபடுத்த, ஏரிகளைத் தூர்த்து பிளாட் போட, 1000 அடி ரெண்டாயிரம் அடி என ஆழ்துளைக் கிணறுகள் இட, கிஞ்சித்தும் யோசிக்காமல் செயலில் இறங்கும் மொண்ணைப் புத்திப் பொதுசனமாகிய நாம் காரணமா அல்லது குளிர்பானக் கம்பெனிகளா? நீரை உறிஞ்ச நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், ஏதோ ஒரு "தன்னாலப் பொங்குற தன்னூத்து" எல்லார் வீட்டுக் கடியிலயும் , வயக்காட்டுக்கடியிலயும் ஓடுதுன்னு புத்திகெட்டு நம்பறதால தானடா!

ஓடி ஓடி உறிஞ்சத் தெரிந்த நாம, மீண்டும் பூமியில் நீர் நிரப்ப என்ன கிழித்தோம் என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல், அரைவேக்காட்டு சினிமா வசனங்களுக்கு கைத் தட்டிப் பொங்கிப் புளகாங்கிதம் அடைந்து விட்டு, 'டாஸ்மாக்'களில் உங்கள் மூளையையும், மூலதனங்களையும் அடகுவைத்துக் குடித்துவிட்டு, தமிழன் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கும் தலைவன் ஒருவன் பிறப்பான் என்று தெருவோரச் சாக்கடைகளில் விழுந்து கிடக்கவோ, இல்லை நடக்கும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கின்லே தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு, பீட்சா சாப்டுட்டு, டிவி பாத்துட்டே வோட்டு கூடப் போடாம குடிப் பணியாற்றிட்டு, உலகத்தையே நொட்டை சொல்லிட்டே காலத்தை கடத்தவோ உன்னால் மட்டும்தான் தமிழா முடியும் .

சரி விஷயத்துக்கு வருவோம். தமிழகத்தின் நீர்த் தேவைகள் எங்கு, எப்படிப் பூர்த்தியாகிறது? மழை எது? நதி எது? குளம் எது? அணை எது? கால்வாய் எது ? கண்மாய் எது ? ஊருணி எது ? தண்ணீர் பற்றிய தமிழனின் அறிவு என்ன?

தமிழ்நாட்டில் 3 வேறுபட்ட காலங்களில் மழை பொழிகிறது . தென்மேற்குப் பருவமழையின் போது (ஜூன் முதல் செப்டம்பர் வரை ) ஒரு சிறிய மழையும், வட கிழக்குப் பருவ மழையின் போது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அதிகபட்ச மழையையும், (ஜனவரி முதல் மே வரை) வறண்ட பருவத்தில் ஒரு சிறிய மழையும் தமிழகத்துக்குக் கிட்டுகிறது. சாதாரண சூழ்நிலைகளில் 945 mm (37.2 in) மழை நமக்குக் கிடைக்கிறது .

தமிழகம் பொதுவில் ஒரு வறண்ட பிரதேசமாக இருந்தாலும் , சில பல வற்றாத ஜீவ நதிகளையும் (பாலாறு, செய்யாறு, பொன்னியாறு, காவேரி, மெய்யாறு, பவானி, அமராவதி, வைகை, சிற்றாறு, தாமிரபரணி ) பல பருவகால நதிகளையும்(வெள்ளாறு , நொய்யல், சுருளி, குண்டாறு இன்னபிற) கொண்டுள்ளது .

முன்னொரு காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும், ஊருணிகள் அமைக்கப்பட்டன , வணிகர்கள், அரசர்கள் எல்லாரும் திருப்பணிக்காக ஊருணிகளும், அவற்றில் தண்ணீர் வந்து சேர கண்மாய்களும் அமைத்தனர். இவை அல்லாமல் இவற்றைப் பராமரிக்க , "குடி மமராமத்து" என்றொரு அருமையான பழக்கமும் இருந்தது. ஆறு குளம் கண்மாய்களைத் தூர்வாற, மக்கள் காசு கேட்காமல் (free labour ) வேலை செய்தனர் , இன்று தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றொரு அருமையான திட்டம் இருந்தும், நீர்நிலைகள் நீர்வரத்துகள் அனைத்தையும் கூலி வாங்கிக் கொண்டு பராமரிக்கும் வாய்ப்புக் கிடைத்த பின்பும், நிழலில் நின்றுகொண்டு, வேலையே செய்யாமல் சிலநூறு 'ஓவா'க்களை வாங்கி டாஸ்மாக்கில் அதையும் கரைத்துக் குடிப்பவன்தானே நீ, தமிழா !

ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராசாவுக்கு ஒருநாள் தன்னோட அரண்மனைக் குளத்துல, பால் நிரப்பிக் குளிக்கணும்னு ஆசை வந்திச்சாம். குளத்துத் தண்ணிய எல்லாம் வெளியேத்திட்டு, எல்லா குடிமக்களையும் கூப்பிட்டு இன்னிக்கு ராத்திரிக்குள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு சொம்பு பால் கொண்டு வந்து குளத்துல ஊத்தணும்னு உத்தரவு போட்டானாம். குடிமக்களும், உத்தரவு ராசாவேன்னுட்டு வீட்டுக்குப் போனாங்களாம். நாள் விடிஞ்சது , ராசா கண்ணுமுழிச்சுப் பாத்தாராம் , குளத்துல ஒருபொட்டுப் பாலில்ல. வெறும் தண்ணிதான். எல்லாப் பயலும், இருட்டுல தான் மட்டும் ஒரு சொம்புத் தண்ணி ஊத்துனாத் தெரியவா போகுதுன்னு, தண்ணி மட்டுந்தான் ஊத்தியிருக்கானுங்க. ஒரு பயலும் பால் ஊத்தல!

இப்படித்தான தமிழா உன் கடமைய மறந்துட்டு, நமக்குப் பதிலா வேற எவனாவது வந்து நம்ம பிரச்சினைகளுக்கு தீர்வு குடுப்பான்னு எந்நேரமும் வெளியிலேயே பராக்குப் பார்த்துட்டு இருக்கற. மழைநீர் சேமின்னு முக்குக்கு முக்கு அரசாங்கம் முழங்குனாலும், நீ இன்னும் போர்வெல் ஆழத்தைக் கூட்டறதுலையே குறியாருக்குற தமிழா !

வானம் பார்த்த பூமியாம் தமிழகத்தில் ,நீர் மேலாண்மை பற்றிய பழமையான அறிவு இருந்தது. அதனால்தான் அணைக் கட்டுகள் சிறியதும் பெரியதும் கட்டி, கண்மாய்கள் வெட்டி அவற்றை ஊருணிகளோடு இணைத்து, கிடைத்த மழைநீரை எல்லாம் தேக்கி வைக்கத் தலைப்பட்டான் தமிழன்.

இன்று இந்த நீர் நிலைகளை மாசுபடுத்தவும , பிளாட் போடவும், ஆக்கிரமிப்புச் செய்வதும் யார் தமிழா ? கொக்ககோலாவா? இல்லை சக தமிழனா? மிகக் குறைந்த நீர் வளம் கொண்ட இஸ்ரேல் நீர் மேலாண்மையைச் சரிவரச் செய்து, விவசாயத்தில் தன்னிறைவு அடைந்திருக்கிறதே? எப்படி... விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேமிப்பதாலும், விவசாயத்துக்கு உகந்த நுட்பங்களைக் கடைபிடிப்பதாலும்தானே.

அட இஸ்ரேலை விடு தமிழா... இங்கே பக்கத்திலிருக்கிற மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிர்வே பஜாரின் கதை அறிந்திருக்கிறாயா? 1989இல் குடிகாரக் கிராமமாக, வறட்சி தலை கால் உடம்பு விரித்து ஆடிய பிரதேசமாக இருந்த அந்த சின்னக் கிராமம் இன்று நீர் மேலாண்மை மற்றும் சரியான விவசாய உத்திகளைப் பயன்படுத்தி லட்சாதிபதிகளின் கிராமமாக மாறிய கதை தெரியுமா ?

பொபட்ராவ் பவார் என்றொரு பஞ்சாயத்துத் தலைவனின் தலைமையில், மொத்தக் கிராமமும் அங்கிருந்த 22 மதுக் கடைகளையும் இழுத்து மூடிவிட்டு, நீர் மேலாண்மைக்காக , 52 நீர்ச் சேமிப்புக் குளங்கள் , 2 பொசிவுக் குளங்கள் (percolation tanks) , 32 கல் வரப்புகள் (stone bunds ), 9 தடுப்பணைகள் எனக் கட்டி எழுப்பியது, கோடிகள் தேவைப்படவில்லை தமிழா, வெறும் தன்னார்வத் தொண்டும், சில அரசுத் திட்டங்களின் பணமுமே போதுமானதாக இருந்தது. யாரும் கத்திக் கத்தி வசனம் பேசவுமில்லை, எதிரியை வெளியில் தேடவுமில்லை. பிரச்சினைக்கான காரணம் , மோசமான நீர் மேலாண்மையே என்பதை உணர்ந்து செயலில் இறங்கினார்கள் , சாதித்தும் காட்டினார்கள்.

1995 ல் வருடாந்திர மழை சுமார் 15 அங்குலம் மட்டுமே, தமிழகம் சாதாரணமாகப் பெறுவது 37 அங்குலம் என்பதை கவனத்தில் இருத்து தமிழா! முதல் பருவ மழைக்குப் பின், நீர்ச் சேமிப்பால், பாசன பகுதி அதிகரித்தது. 2010 ல், கிராமத்தில் மழை 190 மிமீ மட்டுமே கிடைத்தது, ஆனால் நீர் மேலாண்மை நன்கு நிர்வகிக்கப்பட்டதால் , கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைகள் வரவே இல்லை.

நீர் மேலாண்மை அவர்களைப் பல பயிர்கள் அறுவடை செய்ய உதவியது. 1995 க்கு முன், 90 திறந்த வெளிக் கிணறுகள் 80-125 அடியில் தண்ணீர் கொடுத்தன. இன்று, 15-40 அடியில் தண்ணீர் தரும் 294 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளன. பக்கத்து அகமத் நகர் மாவட்டத்தில் மற்ற கிராமங்கள் தண்ணீர் அடைய கிட்டத்தட்ட 200 அடி தோண்ட வேண்டி இருக்கிறது.

1995 ஆம் ஆண்டில், பத்தில் ஒரு பாகம் நிலம் மட்டுமே சாகுபடிக்கு ஏற்றதாக இருந்தது, இன்று மொத்த நிலமும் பயிர் செய்யவோ, தீவனப் பயிர் வளர்க்கவோ பயன்படுகிறது . இன்றும் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பஞ்சாயத்துத் தலைவர்களும், உறுப்பினர்களும், இன்ன பிறரும் ஹிவரே பஜாருக்கு புனிதப் பயணம் போன வண்ணம் இருக்கிறார்கள்.
(புள்ளி விவரங்களுக்கு நன்றி: தெஹெல்கா)

மொத்த இந்தியாவில் ஒரு ஹிவரே பஜார் மட்டும் தானே, அதனால் தான் நம் அட்டைக் கத்தி கலைஞர்கள் கவனத்துக்கு விஷயங்கள் வராமல் வீராணம் குழாய்க்குள்ளே போய் உக்கார வேண்டியதாப் போச்சு என இணையப் போராளிகள் கிசுகிசுப்பது கேட்கிறது. அடப் பதர்களா, கண் திறந்து பாருங்கள், இணையமெங்கும் இதே போல் வெற்றிக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.

பாலைவன ராஜஸ்தானில், தண்ணீர் மனிதன் என அறியப்பட்ட, மெகசேசே விருது வாங்கிய ராஜேந்திர சிங் என்னும் போராளி, மறைந்த ஆர்வாரி நதியை உயிர்ப்பித்துக் காட்டியது நம் அட்டக்கத்திக் கலைஞர்களின் கவனத்தைக் கவரவில்லை. ஏன்னா அங்க கத்திக் கத்திக் வசனம் பேசி, கொக்கோ கோலா கம்பெனி ரவுடிகளை அடித்துத் துவைத்து, தமிழனுக்கு, அரிப்புக்கு சுகமா சபட் லோஷன் தடவிக் காசக் கறக்க முடியாது பாருங்க.

அது எதுக்குப்பா தமிழா , அடுத்த காந்தி இவருதான்னு நீங்க எல்லாம் டீக்கடைல உக்கார்ந்து பேப்பரும் கையுமா விவாதிச்ச அன்னா ஹசாரேவோட ராலேகான் சித்தி , பாபா ஆம்டேவோட சோம்நாத் மற்றும் ஆனந்த்வன் அப்டின்னு நீ பாக்காத நிஜத் தலைவன்கள், நீர்மேலாண்மை பற்றிப் பக்கம் பக்கமா ,புத்தகம் புத்தகமா பேசியிருக்காங்க . இதெல்லாம் நம்ம பேய்த் தூக்கத்தக் கலைக்கல. ஒரு சினிமா வசனம்தான் நமக்கெல்லாம் மின்னதிர்ச்சி கொடுத்து நம்ம ஞானக் கண்ணத் திறந்து வைக்குது.

Balisana, Bhaonta, Kolyala, Darewadi, Devgaon, Gandhigram, Guriaya, Jhabua, Mahudi, Mandalikpur, Mangarol, Melaghar, Moti morasal, Onikeri, Pallithode, Raj Samadhyala, Ranapur, Rozam, Sayagata, Saurashtra, Sukhomajri இப்படி இன்னும் எடுத்துக்காட்டுகள் இணையம் , பத்திரிக்கைகள் பூரா கொட்டிக் கிடக்கு தமிழா...

ஆனா பாவம் நம்ம அட்டக்கத்திக் கலைஞர்களுக்குத் தான் காசு மட்டுமே தெரியிற ஒரு "செலக்டிவ் கம்னாட்டீஷியா" இருக்கு. உன்னிலிருந்து பிறந்த கலைக் கடவுள்கள் உன்ன மாதிரித்தானே இருப்பாங்க தமிழா.

சரி தமிழா, தூற்றுனவரைக்கும் எனக்கு போரடிச்சிரிச்சு! போற போக்குல கொஞ்சம் கலைச் சொற்கள இங்க தூவிட்டு, நான் கிளம்பறேன். நம்ம கரைவேட்டி அண்ணன் ஜோக்குல வருமே அந்தத் தம்பி... ஆங்... கோகுல் தம்பி அதுகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ தமிழா.. இதெல்லாம் என்னன்னு , அட அதாம்பா நம்ம கூகுள் தம்பி ...

1. Rooftop rainwater harvesting

(ஒரு ஆண்டில் ஒரு 100 sq.mts வீட்டில் இருந்து 66,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம் .
இந்த ரீசார்ஜ்டு நிலத்தடி நீர் , ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சாதாரண குடும்பத்தின் , நான்கு மாத காலத்தியத் தேவைகளுக்குப் போதுமானது )

2. Storm water run-offs management using swales.

3. Creating More Permeable surfaces .

4. Ridge To Valley Approach .

5.Farm ponds

அப்புறம் தமிழா, இன்னும் கொஞ்சம் நிஜ ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன். நமக்குத் தேவை வசனமா , விவேகமான்னு இவங்களப் பாத்து கொஞ்சம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போடுவாங்களே , அந்த சூடப் போட்டுக்க தமிழா ..

இதெல்லாம் போ , எந்தப் பயிர், எந்த வகை , குறைவாகத் தண்ணீர் கேட்கும் எனப் புரிந்து பயிரிடுவதும், ஸ்ரீ முறை (SRI -System Of Rice Intensification, (இப்போது இம்முறை ஏனைய பயிர்களிலும் பயனில் இருக்கிறது), DSR (Direct Seeding of Rice ) முறை, Micro Irrigation, Crop rotation, Crop Diversification, Organic Farming, Integrated farming இவை பற்றியெல்லாம் நம் விவசாயிகளுக்கு, கழுத்து நரம்பு புடைக்காம, பெப்சிகாரன குறை சொல்லாம பாடம் எடுத்து கொஞ்சம் புரிய வை தமிழா!

முடிவாய் ஒன்றே ஒன்று தமிழா : நம் பிரச்சினைகளுக்குக் காரணங்களும் , காரணிகளும் நமக்கு வெளியில் இல்லை. நமக்குள்ளேயேதான் இருக்கின்றன என்பதை உணர் ! நம் தவறுகள் என்னென்ன, நம் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றம் கொணர்ந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஆய்ந்தறி ! வெறுமே வீர வசனங்களும், பஞ்ச் டயலாக்குகளும் நம் வாழ்வைத் திருத்தி அமைக்கப் போவதில்லை. திறந்த மனதோடு பிரச்சினைகளை ஆய்ந்து, தீர்வுகள் அறிந்து, அதைச் செயல்படுத்தி, நமக்கு நாமே உதவினால் ஒழிய, நமக்கு உய்வில்லை என்பதை உணர்!

அட்டைக் கத்திகளை நம்பி நேரம், பணம் விரயமிடாமல், உன் மொண்ணைக் கத்தி மூளையைக் கொஞ்சம் கூர் தீட்டு தமிழா ! தமிழகமெங்கும் ஹிவ்ரேபஜார்களை உருவாக்கு, மக்கள் தலைவர்கள், ஒவ்வொரு பஞ்சாயத்திலும், மக்களுக்குள்ளேயே மறைந்திருக்கிறார்கள். அவர்களை பொம்மலாட்டத் திரையில் தேடாதே தமிழா!

முன்குறிப்பை வலியுறுத்தும் ஒரு சிறு பின்குறிப்பு: இந்தப் பதிவை படித்துவிட்டு , "நீ நடிகர் விஜய்க்கு எதிரானவனா ? முருகதாசுக்கு எதிரானவனா ? சினிமாக் கலைஞர்களுக்கு எதிரியா என்று மொண்ணைக் கேள்விகள் கேட்போரின், ட்ரோல் செய்ய முயற்சிக்கும் அறியாப் பதர்களின், வால்கள் ஓட்ட நறுக்கப்படும்.

உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எவ் விதத்திலும் ஆதரிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல. அவர்களைவிட பெரிய குற்றவாளி, அடிப்படைப் புரிதலற்ற, அறியாமையிலிருக்கும் நாமே என்பதை வலியுறுத்தவே இந்த ஆதங்கப் பதிவு. தமிழகத்தின் தண்ணீர்த் தேவையைத் தீர்க்க, விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேகரிக்க வேண்டியதும், தண்ணீரைச் சரியாய்ப் பயன்படுத்தும் மேலாண்மை உத்திகளுமே ஒரே உறுதியான வழி. "தன்னூத்து"கள் தானே பொங்கி நிரம்புவதில்லை, நீயும் நானும் சேர்ந்து நிரப்பினால்தான் அது காலாகாலத்துக்கும் நிறைந்து நம் தேவை தீர்க்கும். கொக்ககோலாவும் பெப்சியும் சிறு எதிரிகள், நீர் மேலாண்மை பற்றிய உன் அடிப்படை அறிவின்மையே பெரும் எதிரி!

குறிப்பு: கட்டுரையாளர் அலெக்ஸ் பால் மேனன் ஐஏஎஸ் அதிகாரி. தமிழர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றுகிறார்.

English summary
Alex Paul Menon, an IAS officer from Tamil Nadu is analysing how water management is poor in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X