நான் குற்றவாளியா? அண்ணாமலைதான் டூப் போலீஸ்.. லஞ்சபேர்வழி.. அமைச்சர் சேகர்பாபு சரமாரி அட்டாக்!
சென்னை: தம்மை சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி என விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலையை ஒரு டூப் போலீஸ், லஞ்சபேர்வழி என நானும் போகிற போக்கில் சொல்லலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 73 நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இன்றைக்கு 33-வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கி வருகிறோம். இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்பதை உறுதி அளிக்கிறோம்.

காமராஜரை விமர்சிக்கிறாரா?
திமுகவில் படித்தவர்கள் யாரும் இல்லை; முட்டாளாக இருக்கின்றனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அதேபோல குற்றப்பின்னணியை கொண்ட அமைச்சர்கள் கல்வி கொள்கையை பற்றி பேசுகிறார்கள் எனவும் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். குற்றப்பின்னணியில் இருக்கும் அமைச்சர்கள் என அண்ணாமலை சொல்வது, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார். படிக்காதவர்கள் எப்படி பள்ளியை பற்றி பேசலாம் என்கிறார் அண்ணாமலை.. ஒருவேளை காமராஜரை களங்கப்படுத்துகிறாரா அண்ணாமலை?
அண்ணாமலை ஒரு தற்குறி
படிப்பு, மனம், சேவைக்கு தொடர்பு இல்லை. மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செயல்படுவார்கள். இது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.
டூப் போலீஸ்- லஞ்ச பேர்வழி என விமர்சிக்கவா?
என்னை சரித்திரப் பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என நான் கூட சொல்கிறேன். ஆதாரம் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை. ஆதாரத்தை காட்டிதான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும். போகிற போக்கில் ஏதாவது வாரித்தூற்றி விட்டு போனால் எப்படி முறையாகும்? ஆதாரத்தைக் காட்ட சொல்லுங்கள்.
ஊசிப் போன பண்டம் பாஜக
அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். ஊசிப் போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026-ல் மக்கள் தூக்கி எறியவும் தயாராக இருக்கின்றனர்.
சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள்- எச் ராஜாவுக்கு பதிலடி
திமுகவினரை சிறைக்கு அனுப்பாமல் ஓயமாட்டேன் என்கிறார் எச்.ராஜா. திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். நீதிபதிகளையே தலைக்கு மேலே இருப்பதற்கு ஒப்பானவர்கள் என பேசுகிறவர்கள் நாங்கள் அல்ல. எங்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறை என்றாலும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள தயாராக் இருப்பதுதான் திமுக.
இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது
இந்தியாவின் வரைபடத்தில் கீழே இருக்கிற தமிழ்நாட்டை, வரைபடத்தில் மேலே இருக்கிற அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். லோக்சபா தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றி அலற்விட்டுள்ளோம். 2026 தேர்தலிலும் 200 தொகுதிகள் என்பது நிச்சயம்; 234 தொகுதிகளில் வெற்றி என்பது லட்சியம். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.












Click it and Unblock the Notifications