NDA கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை சீட்? முடிவு செய்யப்போவது 2 பேர் தான்.. நயினார் கட் & ரைட்!
திண்டுக்கல்: 2026 சட்டசபை தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் என்னென்ன? யார், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்வார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாஜக கூட்டணியில் இருந்த பாமக உள்ளிட்ட கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.

பாஜக - அதிமுக கூட்டணி
2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருவதாகக் கூறப்படும் நிலையில், கூட்டணி ஆட்சி கிடையாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார். அதேசமயம், தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இதனால் கூட்டணிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளன.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள வியாகுல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பங்கேற்றார். அதைத்தொடர்ந்து, திண்டுக்கல்லில் நடந்த திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
யார் யாருக்கு எவ்வளவு சீட்?
இந்தக் கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், "இரட்டை இலை - தாமரை உறுதியான, இறுதியான கூட்டணி. திமுகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டியதுதான் நமக்கு முக்கியம். தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கு வகிக்கும் கட்சிகள் எவை? இன்னும் யாரெல்லாம் இடம்பெற வேண்டும்? யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்து அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்வார்கள்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தினார், எனவே கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது. பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் இதுகுறித்து, எதுவும் பகிரத் தேவையில்லை. சமூக வலைதளங்களில் பாஜகவினர் வெளியிடும் பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும். நமது கட்சியைச் சேர்ந்தவர் ஒரு பதிவிட்டால், அது நியாயமாக இருக்கும் என்று அனைவரும் மதிக்க வேண்டும்.
எடப்பாடி தலைமையில் ஆட்சி
நான் தலைவராக இல்லை. தலைமைத் தொண்டனாகத்தான் இருக்கிறேன். இந்த முறை சட்டப்பேரவைக்கு பாஜகவில் இருந்து அதிக எம்எல்ஏக்கள் செல்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 'தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கன்ட்ரோலில் இருந்து அவுட் ஆஃப் கன்ட்ரோலில் சென்றுள்ளது' என கூறியுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் திமுக அவுட் ஆஃப் கன்ட்ரோலில் தமிழகத்தை விட்டுப்போக வேண்டும் என்ற எண்ணத்துடன் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்திவிட்டால், இனி தமிழகத்தில் திமுக ஆட்சி என்பதே இருக்காது.
அமித் ஷா இனி அடிக்கடி வருவார்
'எந்த ஷா வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது' என முதல்வர் கூறியுள்ளார். அமித் ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகியவற்றில் பாஜக ஆட்சி அமைந்தது. இனி அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார். தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வரும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சிக்கு திண்டுக்கல் பூட்டு போட வேண்டும்" எனப் பேசியுள்ளார் நயினார் நாகேந்திரன்.












Click it and Unblock the Notifications