ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன்பா.. திருக்குவளையிலிருந்து கண்ணீருடன் வந்த 85 வயது மூதாட்டி!

சென்னை: திருக்குவளையிலிருந்து மூதாட்டி ஒருவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரத்துக்கு வருகை தந்தார். அப்போது கருணாநிதியை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் இரு தினங்களாக பரவி வருகிறது. இந்நிலையில் சிறுநீரக நோய் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து கோபாலபுரத்துக்கு வந்த துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கோபாலபுரத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
|
பாதுகாப்பு அலுவலர்
இந்நிலையில் திருக்குவளையிலிருந்து ரத்தினாம்பாள் (85) என்ற மூதாட்டி இன்று காலை கோபாலபுரத்துக்கு வந்தார். அப்போது அவர் கருணாநிதியை பார்க்க வேண்டும் என்று பாதுகாப்பு அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அங்கிருந்து கேட்டு கேட்டு
இதுகுறித்து அவர் கூறுகையில் தலைவரை பார்க்க வேண்டும். டிவியில் நேத்து ராத்திரியிலிருந்து ஏதேதோ சொன்னாங்க, மனசு தாங்கல. அதான் 10.30 மணிக்கு பஸ் ஏறி வந்துட்டேன். மத்திய கைலாஷில் காலையில் இறக்கிவிட்டாங்க. அங்கிருந்து கேட்டு கேட்டு பஸ் ஏறி வந்துட்டேன்பா.

கல்யாணம்
ஒரேயொரு தடவை ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன்பா... எனும் போதே பாட்டிக்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. பின்னர் தொடர்கையில், எனக்கு கல்யாணம் செய்து வைத்ததே தலைவர்தான்பா.

திருப்தி
இவர் இவ்வாறு பேசி கொண்டிருந்ததை கவனித்த பி.கே. சேகர் பாபு எம்எல்ஏ அந்த மூதாட்டியை ஸ்டாலினிடம் அழைத்து சென்றார். அங்கு கருணாநிதியை மருத்துவர்கள் குழுவினர் பார்த்து வருகின்றனர் என்று கூறியதை கேட்டபிறகுதான் நிம்மதியாக உள்ளது என்றார். எனினும் தலைவரை பார்க்க முடியாவிட்டாலும் அவர் நன்றாக இருக்கிறார் என்ற திருப்தியுடன் சென்றார் மூதாட்டி.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!