For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர போலீஸ் என்கவுண்டரை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்! வைகோ அழைப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திர போலீஸ் என்கவுண்டரை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் வரும் 26ம் தேதி உண்ணாநிலை போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைப்புவிடுத்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

நாதியற்றுப் போயிற்றோ தமிழ்ச் சாதி? என்ற கேள்வி நல்லோர் மனதில் எல்லாம் எழுந்துள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி, 20 தமிழர்கள் ஆந்திர மாநிலம் சேசாசலம் வனப்பகுதியில் ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல்படையினரால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆந்திரா பொய்

ஆந்திரா பொய்

அந்தச் சடலங்களை காட்டுக்குள் கொண்டுபோய் வீசி எறிந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த பழைய செம்மரக் கட்டைகளை எடுத்து பக்கத்தில் போட்டுவிட்டு, தமிழர்கள் கள்ளத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு காவல்துறையினரை தாக்கியதாகவும், அந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யான கட்டுக்கதையை ஆந்திர அரசு செய்தியாக்கியது.

மனித உரிமை

மனித உரிமை

மனித உரிமைப் போராளி ஹென்றி திபேன் தலைமையிலான அமைப்பினர் சேசாசலம் பகுதிக்கே சென்று உண்மையைக் கண்டறிந்து, தேசிய மனித உரிமை ஆணையத்தில் மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அந்த ஆணையமும் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தது.

ஆந்திரா தடை

ஆந்திரா தடை

ஆனால், ஆந்திர அரசு, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தடை வாங்கியது. தமிழக அரசு இந்த 20 தமிழர் படுகொலை வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை துச்சமாக மதித்தது.

ஆலோசனை

ஆலோசனை

இந்நிலையில், ஹென்றி திபேன் அவர்களும், நானும் ஜூலை 15 ஆம் தேதி, ஆகஸ்டு 11 ஆம் தேதி இதுகுறித்து ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டங்களில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய பேரியக்கம், தமிழ்ப் புலிகள் கட்சி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி, இயக்குநர் கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2 கட்ட போராட்டங்கள்

2 கட்ட போராட்டங்கள்

ஆகஸ்டு 11ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 20 தமிழர்கள் படுகொலையில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளவும், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தவும், கடமை மறந்த தமிழக அரசை கடமையாற்றச் செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உரிய நிவாரணம் பெறவும், தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆகஸ்டு 26 ஆம் தேதி அன்று தலைநகர் சென்னையில் வள்ளுவர்கோட்டத்துக்கு அருகிலும், செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலும் மிகப்பெரிய உண்ணாநிலை அறப்போராட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆதரவு தாரீர்

ஆதரவு தாரீர்

அண்டை மாநில காவல்துறையோ, அண்டை மாநில அரசுகளோ, மத்திய அரசோ இனி எக்காலத்திலும் தமிழர்களுக்கு தீங்கு விளைவிக்க முனையக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் இந்த அறப்போரில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்களையும், தமிழ் உணர்வாளர்களையும், இந்த முடிவினை செயல்படுத்த வேண்டிய கட்சிகளின் தோழர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

English summary
MDMK leader Vaiko will be lead the protest on 26th of this month in Chennai against Andhra police encounter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X