For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணாவின் 107வது பிறந்தநாள்… திருப்பூரில் மாநாடு நடத்துகிறது மதிமுக!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அண்ணாவின் 107 ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டினை, பெரியாரும், அண்ணாவும் முதன்முதலாகச் சந்தித்த திருப்பூர் மாவட்டத்தில் நடத்துவது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.

மதிமுக உயர்நிலைக்குழு தீர்மானம் இன்று சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் புறக்கணிப்பு, அண்ணாவின் 107வது பிறந்தநாள் மாநாடு திருப்பூரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்ணாவின் பெருமை

அண்ணாவின் பெருமை

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற மணிவாசக அடித்தளத்தின் மீதுதான் ஜனநாயகம் எழுந்து நிற்கிறது. உலகில் சிறந்த ஜனநாயக நாடுகளுள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. அதற்குச் சான்றாக, உரைகல்லாக பொதுத் தேர்தல்கள்தான் அமைகின்றன. மக்கள் ஆட்சியின் மாண்பினைத் தமிழகத்தில் ஏழை எளியோருக்கும், படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் தனது பரந்து விரிந்த அறிவாற்றலாலும், நிகரற்ற எழுத்தாற்றல், சொல்லாற்றலாலும் உணர்த்திய பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.

கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கம்

துணைக்கண்டத்திலேயே ஜனநாயக தென்திசைச் சுடரொளியாகத் தமிழகம் பிரகாசிக்க தமிழ்நாட்டின் புகழ்மிக்க தலைவர்கள் பலர் செயற்கரிய சேவை செய்தனர். எனினும், அறிஞர் அண்ணா கலங்கரை விளக்கமாய் உயர்கிறார்.

பணநாயகம்

பணநாயகம்

அண்மைக்காலமாக, தேர்தல் என்பது போட்டியிடும் கட்சிகளின் இலட்சியங்களையும், செயல்பாட்டினையும் மக்கள் துலாக்கோல் நிலையில் ஆய்வதற்குப் பதிலாக, பணத்தை வாக்காளர்கள் எடை போட்டுப் பார்க்கும் நிகழ்வாகி விட்டது. அதிலும் இடைத்தேர்தலில் அரசு அதிகாரம் ஆளுங்கட்சியின் எடுபிடியாக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு 1000 முதல் 5000 வரை பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும் இலஞ்ச பேரமாக மாறிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை ஆகும். இதைத் தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள்.

பணத்திற்கு வாக்கு

பணத்திற்கு வாக்கு

எதேச்சாதிகாரமும் சர்வாதிகாரமும் ஜனநாயகத்தை அழிக்க முனைவதும், அதனை எதிர்த்து மக்கள் புரட்சி வெடிப்பதும் நடைபெற்றாலும், அதைவிடப் பேராபத்தாக ஊழல் பணத்தால் ஓட்டுகளை விலைக்கு வாங்குகின்ற அக்கிரமம் தற்போது தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நச்சுச் சுழலில் இருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும்.

பணம் வெள்ளமாக பாயும்

பணம் வெள்ளமாக பாயும்

வளரும் இளைய தலைமுறையினரும், மாணவர் உலகமும் கிளர்ந்து எழுந்து ஆவேசமாகக் களம் காணும் ஒரு ஜனநாயகப் புரட்சி ஏற்பட வேண்டும். ஆனால் அத்தகைய நிலைமை உடனடியாகப் புலப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், தலைநகர் சென்னையில் ஆர்.கே. நகர் தொகுதியில், அனைத்து இந்திய அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் போட்டியிடுகிறார். பணத்தை வெள்ளமாகப் பாய விட ஏற்பாடுகள் தயார்.

மதிமுக நிலைப்பாடு

மதிமுக நிலைப்பாடு

தன்மானத்தையும், சுயமரியாதையையும் முன்னிறுத்தி 2011 பொதுத் தேர்தலை மறுமலர்ச்சி தி.மு.கழகம் புறக்கணிக்க நேர்ந்தது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், மக்கள் மன்றத்தின் பேராதரவு எங்கள் இயக்கத்திற்கு ஆதரவாகத் தென்பட்ட நிலையிலும், ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் தொகுதி முழுவதும் படை எடுத்ததால், கிடைக்க வேண்டிய வாக்குகளும் கழகத்திற்குக் கிடைக்கவில்லை. ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை இடைத்தேர்தல்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்தது. அந்த இரண்டு தொகுதிகளிலும் இன்றைய ஆளும் கட்சியின் பணம் கங்கை வெள்ளமாகப் பாய்ந்தது.

தொண்டர்கள் படை

தொண்டர்கள் படை

காவிரி உரிமை உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், உழவர் மீனவர் துயர் துடைக்கவும், தமிழ் ஈழ விடியல் காணவும், அடுக்கடுக்கான அறப்போர்க் களங்களைத் தமிழகத்தில் மட்டும் அன்றி, மத்தியப் பிரதேசத்திலும் தலைநகர் டெல்லியிலும் நடத்திடும் நெஞ்சுரமும், துணிவும், தியாக சித்தமும் படைத்த இலட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட இயக்கம்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தல்

நேர்மையின் நெருப்பாகத் திகழும் எமது இயக்கம், 21 ஆண்டுகளாகத் தன்னலம் இன்றித் தங்களை வருத்திக் கொண்டு, நடுத்தர அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த எமது உயிரான தோழர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் முறைப்படி 11 மாதம் கழித்தும் வரலாம்; அல்லது தேர்தல் ஆணையத்தின் சமிக்ஞையோடு, இந்த ஆண்டு டிசம்பருக்குள் ஒருவேளை வரவும் கூடும்

இடைத்தேர்தல் புறக்கணிப்பு

இடைத்தேர்தல் புறக்கணிப்பு

இந்தியத் தேர்தல் ஆணையமும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியும் நேர்மையான தேர்தல் குறித்து விடுக்கும் அறிக்கைகளுக்குக் குப்பைக் காகிதத்திற்குள்ள மதிப்பு கூடக் கிடையாது என்ற உண்மையையும் மனதில் கொண்டு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முற்றாகப் புறக்கணிப்பது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கின்றது.

திருப்பூரில் மாநாடு

திருப்பூரில் மாநாடு

தமிழ் இனத்தின் சகாப்த நாயகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 இல் பெருஞ்சிறப்போடு மாநாடுகளாக நடத்திக் கொண்டாடி வருகிறது.

தாய்ப்பாச உணர்வுடன்

தாய்ப்பாச உணர்வுடன்

இலட்சோபலட்சம் தம்பிமார்களை தாய்ப்பாச உணர்வுடன் அரவணைத்து மகத்தான சாதனைகளைப் படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களது இலட்சியங்களை நினைவு கூர்வதும் நிலைநாட்டக் களம் காண்பதுவும் இன்றைய தலைமுறையின் தலையாய கடமை என்பதை உணர்த்திடும் குறிக்கோளோடு, பேரறிஞர் அண்ணா அவர்களின் 107 ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டினை, அறிவாசான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும் முதன்முதலாகச் சந்தித்த திருப்பூர் மாவட்டத்தில் நடத்துவது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கிறது.

English summary
Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) would celebrate the former chief minister C.N. Annadurai 107 Birthday by organising a conference in Tirupur on September 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X