For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று தலைமை செயலகம்.. இன்று அண்ணா நூலகம்..: தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா நூலகத்தை பராமரிப்பின்றி விட்டுள்ளதாக தமிழக அரசை திமுக தலைவர் கருணாநிதி கண்டித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

அரசால் முற்றிலும் கைவிடப்பட்ட அண்ண நூலகம் - புத்தகம், பராமரிப்பின்றி முடங்கும் அபாயம் - மக்கள் வரிப் பணம் வீணா போச்சு" என்ற தலைப்பில் நாளேடு அண்ணா நூலகம் பற்றி விரிவாக 30-3-2015 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் "கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் வாங்காமல், பராமரிப்பு இல்லாமல், சென்னை அண்ணா நுற்றாண்டு நூலகம், தமிழக அரசால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதுவரை, 23 அலுவலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அண்ணா நூலகத்தை முடக்கும் முயற்சி, நீதி மன்றத்தால் நிறுத்தப்பட்ட போதும், நூலகம் உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி வருகிறது. இதுகுறித்து, நூலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூறும்போது, "நூலகத்தின் நிலை குறித்து, கடந்த நான்காண்டுகளாக, பள்ளிக்கல்வித் துறைக்கும் தமிழக அரசுக்கும் பல மனுக்களை அனுப்பியுள்ளோம். ஆனால், அரசியல் காரணங்களால், இந்த நூலகத்தை முடக்கி வைத்துள்ளனர்.

Anna library issue: Karunanidhi condemns TN government

எந்த ஓர் அரசு அதிகாரியும், நூலகத்தில் ஆய்வுக்கு வருவதில்லை. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, அரசின் கவனிப்போ இல்லாததால், நூலகம் முடங்கி விடுமோ என்ற அச்சத்தில் இதுவரை 23 பேர் ராஜினாமா செய்து விட்டனர். மற்றவர்களும் வேறு பணிகளைத் தேடுகின்றனர். புத்தகங்கள் வாங்காததால் வாசிக்க வருபவர்களும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இந்த நூலகம், சர்வதேச அந்தஸ்து பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த நாங்கள், தற்போது சாதாரண நூலகங்களில் ஒன்றாகமுடங்கி விடுமோ என்ற வேதனையில் உள்ளோம்" என்று கூறியிருக்கிறார்கள்.

அண்ணா நூலக வளர்ச்சிப் பணிகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, "அரசுத் தரப்பில் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்கிறோம். எங்களை தேவையின்றி சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்" என்று கூறினார்களாம்.

இது தான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் இன்றைய நிலை! பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு பல பிரிவுகளையும் உள்ளடக்கி, தமிழகத்தைச் சேர்ந்த வருங்கால மாணவர்கள், எதிர்காலச் சந்ததியினர் எல்லாம் தங்களை அறிவு பூர்வமாகச் செழுமைப் படுத்திக் கொள்ள; நீண்ட காலத்திற்குப் பயன்படுத்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு அந்த நூலகத்தை தி.மு. கழக ஆட்சியில் நான் நிர்மாணித்தேன். நான் திறந்து வைத்தேன் என்பதற்காக, ஜெயலலிதா அந்த இடத்தை மருத்துவ மனையாக மாற்றப் போகிறேன் என்று அறிவித்தார்.

தற்போது ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு, நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு காரணமாக அமுலாகாமல் உள்ளது. ஆனாலும் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைப் பாழ்படுத்தி, அந்த நூலகத்தை எந்த அளவிற்குக் கெடுத்து, மாசுபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு அதற்கான அத்தனை ஏற்பாடுகளிலும் அ.தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் மனதிற்கோர் ஆறுதலாக தமிழ்நாட்டு ஏடுகள் எல்லாம் அ.தி.மு.க. அரசின் விரும்பத்தகாத முயற்சிகளைத் தொடர்ந்து கண்டித்து வருகின்றன.

குறிப்பாக "தினமணி" நாளேடு, "அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பின் போது, நூலக வளாகத்திலேயே திருமண வீட்டினர் சமைத்துள்ளனர். இதன் காரணமாக நூலகத்தின் அமைதி கெடுவதோடு, அந்த வளாகமும் மாசடை வதாக நூலக வாசகர்கள் புகார் தெரிவித்தனர்" என்று எழுதியிருந்தது. ஆனால் இந்த ஆட்சியினர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர்களாகத்தெரியவில்லை.

இந்தச் செய்திகளை நான் ஏடுகளில் படித்தவுடன் வழக்கறிஞர் தம்பி வில்சனை என் வீட்டிற்கு அழைத்து, இந்தப் பிரச்சினையை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

அவரும் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று, முறையிட்டதின் பேரில் மேதகு தலைமை நீதிபதி அவர்கள் அண்ணா நூலகத்தை திருமணத்திற்காக வாடகைக்கு விட்டது பற்றி தனது கண்டனத்தைத் தெரிவித்து, இனிமேல் அவ்வாறு செய்யக் கூடாது என்றும் வேறு ஏதாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக முன்பணம் வாங்கியிருந்தால்கூட அதனைத் திரும்ப ஒப்படைத்து விட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

அ.தி.மு.க. ஆட்சி தொடங்கியவுடனேயே பேரறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை ஜெயலலிதா எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்போவதாகவும், தற்போதுள்ள கட்டிடத்தில் குழந்தைகள் மருத்துவ மனை தொடங்கப் போவதாகவும் அறிவித்தார். அது குறித்த வழக்கில் உயர் நீதி மன்றதலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு அப்போதே, "இப்படி ஒரு அருமையான, நவீன வசதி கொண்ட, நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட சிறந்த நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன்? மருத்துவமனை கட்டுவதென்றால் மெரினா கடற்கரையில் கட்டலாமே! அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நூலகம் தற்போது எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றியும், அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இந்த நான்காண்டு காலத்தில் இணை இயக்குனர் உட்பட, அரசு அதிகாரிகள் யாரும் ஆய்வுக்காக வரவே இல்லையாம். நான்காண்டுகளாக புதிதாக ஒரு புத்தகம் கூட வாங்கவில்லையாம். பார்வையற்றோருக்கான, "பிரெய்லி" பிரிவு பராமரிப்பின்றி கிடக்கிறதாம்.
குழந்தைகளை அழைத்து வர பெற்றோர் தயங்குகிறார்களாம். மாதம் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியும் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லையாம். போட்டித் தேர்வுப் பிரிவில் புதிய புத்தகங்களின்றி, பட்டதாரிகள் வருவது குறைந்து விட்டதாம்.

நூலக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கான விடுதி, காவலாளிகள் தங்குமிடமாக மாறியுள்ளதாம். அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் பார்த்து வியந்த 1,500 பேர் அமரக் கூடிய ஆடிட்டோரியம், ஆள் அரவமின்றி பூட்டிக் கிடக்கிறதாம். நூலகத்தின் வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில் பணியாற்ற ஆட்கள் இல்லை. எட்டு மாடிகளில் பொருத்தப்பட்ட 500 கேமராக்களின் லென்ஸ்கள் செயலற்று உள்ளன. கணினிகள் இயங்கவில்லை. ஓலைச் சுவடிகளுக்கான தனிப்பிரிவு மாயமாகிவிட்டது. புத்தகங்களுக்கான சரியான தகவல் விவரம் இல்லை.

வாசிப்பாளர்களின் வருகை நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்பது 1200 பேராகக் குறைந்து விட்டது. இதனால் பல கோடி ரூபாய் செலவு செய்து கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் தனிப்பட்ட ஒரேஒருவருடைய காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து வசதிகளும் பாழ்பட்ட நிலையில் உள்ளன.

"வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்" என எடுத்துச் சொல்லி, தமிழகத்தைத் தட்டி எழுப்பிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த நூலகத்திற்கே இந்தக் கதியா? ஏன், தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவைக்காக தி.மு. கழக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தைத் தான் இயங்க விட்டார்களா? பிரதமரும், சோனியா காந்தியும், மற்ற மாநில முதல்வர்களும் வருகை தந்து என் தலைமையில்திறக்கப்பட்ட கட்டிடம் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சியால் தானே, அந்தக் கட்டிடம் எதற்காகக் கட்டப்பட்டதோ, அதற்காக இயங்க அனுமதிக்கப்படாமல் உள்ளது.

இதனால் மக்கள் கொடுத்த வரிப் பணம் தான் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணமானவர்கள் இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும், தங்களுடைய மனசாட்சிக்காவது பதில் சொல்ல வேண்டிய நேரம் நிச்சயம் வந்தே தீரும்! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi condemns TN government for not showing any attention toward Anna library.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X