கள்ளச்சாராய பலி.. அண்ணாமலைக்கு போன் போட்ட அமித் ஷா.. ரிப்போர்ட் டெல்லி பறக்குதாம்!
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய பலி சம்பவம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 90 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷச்சாராயம் அருந்தி பலியானோர், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களைச் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை ஒவ்வொரு வீடாகச் சென்று நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு சார்பில் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படும். பலியானோர் குடும்பங்களுக்கு தமிழக பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
கள்ளச்சாராய பலி சம்பவம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இதுதொடர்பான விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். நாகரிகமான சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது என நினைக்கிறோம்.
கள்ளச்சாராயம் விற்பனை கிராமங்களில் நடைபெறவில்லை. மாவட்ட தலைநகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது.
பாக்கெட் சாராயம் விற்பனை நடைபெற்றதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளது. இறந்து போனவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். அவர்களால் தினமும் போய் விலை அதிகமாக உள்ள டாஸ்மாக் மதுபானங்களைக் குடிக்க முடியாததால் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்டோரை சந்தித்தார். மேலும், தேமுதிக பொதுச் செயலாளார் பிரேமலதா விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications